
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் ஸ்ரீதாத தேசிகன் சாற்றுமுறை உற்வசத்தையொட்டி உற்சவர் வரதராஜப் பெருமாளும்,பெருந்தேவித்தாயாரும் ரத்ன அங்கி அணிந்து ஞாயிற்றுக்கிழமை பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விஜயநகர பேரரசின் ராஜகுருவாகவும்,காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலின் ஆதிகால தர்மகர்த்தாவாகவும் இருந்தவர் ஸ்ரீ தாத தேசிகன்.இவரது சேவைகளைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் அவரது அவதார திருநாளில் வரதராஜப் பெருமாளும், தாயாரும் ரத்ன அங்கி அணிந்து ஆலய வளாகத்தில் உள்ள தாததேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளி அவருக்கு மரியாதை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.ஸ்ரீதாத தேசிகன் சாற்றுமுறை உற்சவத்தையொட்டி திருமலையிலிருந்து ஸ்ரீதேவி,பூதேவி தாயாருடன் பெருமாள் ரத்ன அங்கி அணிந்தாவறு இறங்கி பெருந்தேவித்தாயார் சந்நிதிக்கு எழுந்தருளினார்.
பின்னர் ரத்ன அங்கி அணிந்த பெருந்தேவித்தாயாரும்,வரதராஜப் பெருமாளும் ஆலய வளாகத்தில் ஆழ்வார் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள ஸ்ரீதாத தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளினர்.
தாயாரும், பெருமாளும் அணிந்திருந்த ரோஜா மாலைகளை ஸ்ரீ தாத தேசிகனுக்கு சாற்றி மாலை மரியாதை செய்யும் நிகழ்வு நடைபெற்று சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னர் பெருமாளுக்கும், தாயாருக்கும் தாத தேசிகன் சந்நிதியிலியே சிறப்புத் திருமஞ்சனமும் நடைபெற்றது. மாலையில் உற்சவர் வரதராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஆலயத்தின் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் சந்நிதிக்கு எழுந்தருளி தீபாராதனைகள் நடைபெற்று மீண்டும் தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளினார்.
பின்னர், பெருமாளும்,தாயாரும் ஆழ்வார் சுற்றுப்பிரகாரத்தை வலம் வந்து தாயார் அவரது சந்நிதிக்கும்,பெருமாள் திருமலைக்கும் எழுந்தருளினர்.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ச.சீனிவாசன் மற்றும் கோயில் பட்டாச்சாரியார்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
ரத்ன அங்கி அணிந்து பெருமாளும்,தாயாரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு ஸ்ரீ தாத தேசிகன் அவதார நட்சத்திர நாளிலும், மற்றொன்று வைகுண்ட ஏகாதசி திருநாள் என இரு நாட்கள் மட்டுமே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.