

உயர்கல்வித் துறை சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ. 21 கோடியே 60 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டடங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தார்.
தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த இளைஞர்களை உருவாக்குதல், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில புதுமைப் பெண் திட்டம், அதேபோன்று அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில தமிழ்ப்புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்குதல், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.
சென்னை மாநிலக் கல்லூரியில் 5.7.2022 நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதல்வர்,300-க்கும் மேற்பட்ட சிறப்பு மாணவ, மாணவியர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்து இங்கே வந்து, தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தேவையான வசதிகளுடன் கூடிய விடுதிகள் இல்லாத காரணத்தால், சிறப்பு மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு வசதிகளுடன் மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே அவர்களுக்கு விடுதி அமைத்துத் தரப்படும் என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.21 கோடியே 60 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தார்.
விடுதிகளை திறந்து வைத்து பார்வையிட்ட பின், அங்கு தங்கியுள்ள சிறப்பு மாணவ, மாணவியர்களிடம், அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என்றும், வேறு என்ன வசதிகள் தேவை என்றும் கேட்டறிந்தார்.
அதற்கு மாணவ, மாணவியர்கள் தேவையான வசதிகள் உள்ளது என்றும், விடுதியை அமைத்து தந்ததற்கு தங்களது நன்றியினையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த விடுதிக் கட்டடங்களானது, சிறப்பு மாணவர்களுக்கு தனிக் கட்டடமாகவும், சிறப்பு மாணவியருக்கு தனிக் கட்டடமாகவும் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடங்கள் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 64,455 சதுர அடி கட்டட பரப்பளவில் 38 மாணவர் அறைகள் மற்றும் 32 மாணவியர் அறைகளுடன், 114 மாணவர்களும், 96 மாணவியர்களும் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது.
சிறப்பு மாணவ, மாணவியருக்கான விடுதிகளின் அனைத்து தளங்களிலும் தொட்டுணரக்கூடிய வழிகாட்டும் மேற்பரப்பு குறிகாட்டிகளுடன் கூடிய தரை அமைப்பு, பார்வையற்ற சிறப்பு மாணவர்களுக்கான பிரெய்லி பலகைகள், அனைத்து அறையிலும் அவசர அழைப்பு மணி பொருத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அறையிலும் சிறப்பு மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் சிறப்பு வகை அலமாரிகள், அனைத்து அறைகளிலும் ஸ்மார்ட் லாக், பிரத்யேக சாய்தள அமைப்பு, ஒவ்வொரு குளியலறை மற்றும் கழிவறைகளில் அவசரக் குறியீடு விளக்குகள், கழிவறைகளில் சிறப்பு வைகிராப் பார்கள், நான்கு மின்தூக்கிகளிலும் ஒலி மற்றும் ஒளி அமைப்பான்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்த கட்டடமானது, காப்பாளர் அறைகள், அலுவலக அறைகள், உணவு உண்ணும் அறைகள், பொது அறைகள், சமையலறை போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, முனைவர் கோவி. செழியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.