வாயுக் கசிவை சரிசெய்ய தொட்டிக்குள் இறங்கிய ஊழியர் பலி!

ஒடிசாவில் வாயுக் கசிவை சரிசெய்வதற்காக தொட்டிக்குள் இறங்கிய ஊழியர் பலியானதைப் பற்றி..
இறந்த ஊழியரின் உடலை மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள தீயணைப்பு படையினர்
இறந்த ஊழியரின் உடலை மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள தீயணைப்பு படையினர்
Published on
Updated on
1 min read

ஒடிசா: பாரதீப் நகராட்சியில் வாயுக் கசிவை சரிசெய்ய தொட்டிக்குள் இறங்கிய ஊழியர் விஷவாயு தாக்கியத்தில் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

தலாதந்தா எனும் கிராமத்தில் கட்டாக்-பாரதீப் மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் பாரத் கேஸ் ரிசோசர்ஸ் லிமிடெட் எனும் நிறுவனத்திற்குச் சொந்தமான வாயுக்குழாய் உள்ளது. அந்த குழாயில் வாயுக்கசிவு ஏற்படுவதாக அந்த கிராம மக்கள் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின் பேரில் அதனைச் சரி செய்ய அந்நிறுவனம் சார்பில் ஒப்பந்ததாரர்களின் மூலம் பிஜய்சந்திரப்பூர் எனும் கிராமத்தை சேர்ந்த இரு பணியாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அனுப்பப்பட்டனர். இவர்களுடன் பாதுகாப்புக்கு தீயணைப்புத் துறையை சார்ந்த ஒருவரும் வந்துள்ளார். மேலும், இப்பணியின் காரணமாக நெடுஞ்சாலையில் போகும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த காவல் துறையினரும் அங்கு பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அவ்விரு ஊழியர்களுள் ஒருவரான 35 வயதான பரிமல் கைனா, அந்த வாயுக்கசிவைச் சரி செய்து அடைப்பதற்காக அதன் சேகரிப்புத் தொட்டிக்குள் இறங்கியுள்ளார். உள்ளே இறங்கிய சில நிமிடங்களில் விஷவாயு தாக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார். பரிமல் கைனா மயங்கியதைப் பார்த்து வெளியே இருந்த மற்றொரு ஊழியர் உடனடியாக அங்கிருந்த காவல் துறையிடமும் தீயணைப்புத் துறையிடமும் தெரிவித்தார். ஆனால், அவர்கள் பரிமல்லை மீட்டு வெளியே கொண்டுவருவதற்குள் அவர் உயிரிழந்தார்.

பின்னர், பரிமல் கைனாவின் உடல் கூராய்வு செய்வதற்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து, பரிமலுடன் வந்திருந்த மற்றொரு ஊழியர் கூறுகையில், அந்த தொட்டிக்குள் இறங்கி வாயுக்கசிவை அடைப்பதற்கு ஒப்பந்ததாரரோ அல்லது அந்த நிறுவனமோ எந்தவொரு பாதுகாப்பு கவசமும் கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இதுபற்றி பேசிய அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி, அந்த வாயுக்கசிவு அடைக்கப்பட்டுவிட்டதாகவும், அந்த ஊழியர் மரணமடைந்ததிற்கான உண்மையான காரணம் என்ன? என்பது உடற்கூராய்விற்கு பின்னரே தெரியவரும் என்றும் கூறியுள்ளார்.

இந்தப் பணிக்காக பிஜய்சந்திரப்பூரைச் சார்ந்த அவ்விருவரும் முன்னனுபவம் இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com