அண்ணா பல்கலை. பாலியல் புகார்: காவல் துறை விளக்கம்!

அண்ணா பல்கலை. பாலியல் வன்முறை புகார் தொடர்பாக காவல் துறை விளக்கம்.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வாயிலில் மாணவர்கள் போராட்டம்.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வாயிலில் மாணவர்கள் போராட்டம்.
Published on
Updated on
2 min read

அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறை நடந்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பாக காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஒரு மாணவரும், மாணவியும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் டிச. 23 (திங்கள்கிழமை) இரவு, இருவரும் கல்லூரி வளாகத்தில் தனியாக பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு அடையாளம் தெரியாத இருவர் வந்து, மாணவரைத் தாக்கிவிட்டு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதையடுத்து மாணவி பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக காவல் துறை வெளியிட்ட விளக்கம்:

கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் 23.12.2024 -ஆம் தேதி இரவு சுமார் 8 மணியளவில் தனியாக ஒரு கட்டடத்திற்கு பின்னால் பேசிக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும், அதே நபர் தன்னை பாலியல் வன்முறைக்கு உள்படுத்தியதாகவும். கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் AWPS ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை செய்யப்பட்டு வருகிறது. காவல் அதிகாரிகள் பல்கலைக்கழக உள் புகார் குழுவின் (ICC-POSH) ஒத்துழைப்புடன் விசாரணை/ செய்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக குற்றவாளியை கைது செய்வதற்கு கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

புலன்விசாரணையின் போது. அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன், (37) என்பவர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். சந்தேக குற்றவாளியும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இவர் நடைப்பாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் வேறு ஏதாவது குற்ற செய்கையில் ஈடுபட்டிருக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பெருநகர சென்னை காவல் துறை அதிகாரிகளும், பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளும் சேர்ந்து ஆலோசனை செய்து (Joint Security Review) மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “கிண்டி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தனிப்பட்ட ஒரு மாணவி பாதிக்கப்பட்டுள்ள இச்சம்பவத்தை அரசியல் ஆக்க விரும்புகிறவர்கள். கடந்த ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அன்றைய ஆட்சியாளர்களின் அழுத்தத்தால் காவல்துறையில் புகார் அளிக்கக் கூட பாதிக்கப்பட்டவர்கள் பயந்தனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

திமுக ஆட்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக் கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com