ஆளுநர் இதனால்தான் சென்றுவிட்டாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது: ஓ.பன்னீர்செல்வம்

ஆளுநர் உரையில் புதுமை இல்லை: ஓ.பி.எஸ் குற்றச்சாட்டு
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

ஆளுநர் இதனால்தான் சென்றுவிட்டாரோ என்ற சந்தேகம் ஏற்படுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவை பேரவையில் இன்று வாசிக்கப்பட்ட ஆளுநரின் உரை என்பது திராவிட மாடல் ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையை படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சென்ற நான்கு ஆண்டு உரைகளின் கலவையாக உள்ளது.

பொதுவாக ஆட்சியாளரின் கொள்கைத் திட்டங்களை விளக்குவதே ஆளுநரின் பேருரை என்று அண்ணா, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலேயே சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார். இப்படிப்பட்ட கொள்கைத் திட்டங்கள் ஏதும் இல்லாத காரணத்தினாலோ என்னவோ, இந்த உரையை படிக்காமல், இதில் உள்ள கருத்துகளிலிருந்து முரண்படுகிறேன் என்று சொல்லிவிட்டு ஆளுநர் சென்றுவிட்டாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

ஆளுநர் உரையில் மக்களுக்கான நலத் திட்டங்கள் ஏதும் இருக்கிறதா? தமிழ்நாட்டிற்கு பயனளிக்கக்கூடிய திட்டங்கள் ஏதும் இருக்கிறதா? என்று துருவிப் பார்த்தேன். ஆனால், அப்படி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, அரைத்த மாவையே அரைத்திருக்கிறார்கள். இதனை நேரத்தை வீணடிக்கிற வேலை என்றுதான் சொல்ல வேண்டும்.

மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதை எல்லாம் ஒரு சாதனையாக ஆளுநர் உரையில் குறிப்பிடுவது நகைப்புக்குரியதாக உள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பழைய ஒய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு, மருத்துவர்களுக்கான அரசாணை எண். 354-ஐ நடைமுறைப்படுத்துதல், மாதம் ஒரு முறை மின் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கல்விக் கடன் ரத்து, ரேஷன் கடைகளில் கூடுதல் சர்க்கரை மற்றும் ஒரு கிலோ உளுத்தம் பருப்பு, 100 ரூபாய் எரிவாயு மானியம் போன்றவை குறித்து ஏதும் அறிவிக்கப்படாதது மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தினை அளித்துள்ளது.

புதுமைப் பெண் திட்டம், பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம், முதல்வரின் காலை உணவுத் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதிய உயர்வு, பால் கொள்முதல் விலை உயர்வு என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தான் இந்த ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளதே தவிர, மக்களுக்கு பயனளிக்கும் திட்டம் எதுவும் இந்த ஆளுநர் உரையில் குறிப்பிடப்படவில்லை.

மொத்தத்தில் இந்த ஆளுநர் உரையில் புதியதாக ஏதுமில்லை. பல பொய்களை சொல்லி மக்களை தொடர்ந்து ஏமாற்ற தி.மு.க. அரசு முயற்சி செய்து வருகிறது. இனியும் மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. வருகின்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க. அரசுக்கு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com