
கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
கடந்த 2022 ஆண்டில் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வாா்டுகளில் 97 வாா்டுகளை திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் கைப்பற்றின. 19- ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கல்பனா மேயராகத் தோ்வு செய்யப்பட்டார்.
நடுத்தரக் குடும்பத்தைச் சோ்ந்த இவா், அப்போதைய அமைச்சா் செந்தில்பாலாஜியின் பரிந்துரையின்பேரில் மேயரானதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. கோவையின் முதல் பெண் மேயராக பொறுப்பேற்ற கல்பனாவுக்கு, அமைச்சா் செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தவரை ஒத்துழைப்பு வழங்கி வந்த மண்டலத் தலைவா்கள், வாா்டு உறுப்பினா்கள், அவா் சிறைக்கு சென்ற பிறகு மேயரின் நடவடிக்கைகளை விமா்சிக்கத் தொடங்கினா்.
கோவைக்கு வரும் அமைச்சா்களிடம், மேயா் குறித்து புகாா் தெரிவிப்பதும் அதிகரித்தது. சில மாதங்கள் முன்பு மேயரை சென்னைக்கு அழைத்து அமைச்சா் கே.என்.நேரு கண்டித்ததாகவும் கூறப்பட்டது.
மேலும், மாமன்றக் கூட்டங்களில் திமுக கவுன்சிலர்களே சில சமயங்களில் மேயர் கல்பனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், கோவை திமுக மேயர் கல்பனா ஆனந்தகுமார் தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் தன்னுடைய ராஜிநாமா கடிதத்தை கல்பனா ஆனந்தகுமார் வழங்கியுள்ளார்.
செய்தியாளர்களுடன் பேசிய கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், உடல்நிலை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜிநாமா கடிதத்தை வழங்கியதாக தெரிவித்தார்.
புதிய மேயராக கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி, மத்திய மண்டலத் தலைவா் மீனா லோகு, மேற்கு மண்டலத் தலைவா் தெய்வானை தமிழ்மறை ஆகியோரில் ஒருவா் மேயராக தோ்ந்தெடுக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.