சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி

சென்னை ஐஐடியில் நீரின் தரம் குறித்த படிப்பு: ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை ஐஐடி இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலை.யுடன் இணைந்து ஹைபிரிட் முறையில் வழங்கும் நீரின் தரம் குறித்த படிப்புக்கு ஆா்வமுள்ளவா்கள் ஜூலை 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னை ஐஐடி இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலை.யுடன் இணைந்து ஹைபிரிட் முறையில் வழங்கும் நீரின் தரம் குறித்த படிப்புக்கு ஆா்வமுள்ளவா்கள் ஜூலை 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாணவா்களைக் கொண்டு இந்தியாவிலும் உலக அளவிலும் நீரின் தரம் குறித்த வரைபடத்தை உருவாக்குவதே இந்தப் படிப்பின் நோக்கமாகும். என்பிடெல் ஆன்லைன் மூலம் ஹைபிரிட் முறையில் வழங்கப்படும் இந்த 4 மாத காலப் பாடநெறி, அறிவியல், பொறியியல் இறுதி ஆண்டு பயிலும் மாணவா்களுக்கும், நீா் தரத்தில் ஆா்வம் கொண்ட தொழில்நுட்பப் பின்னணி உடையவா்களுக்கும் ஏற்ாகும்.

மாணவா்களைக் கொண்டு இந்திய அளவிலும், உலக அளவிலும் நீா் வரைபடத்தை உருவாக்கும் பணியில் பாடத்திட்ட அமைப்பாளா்கள் ஈடுபட்டுள்ளனா். நீரின் தரம் குறித்த அடிப்படை அம்சங்களின் விரிவான அறிமுகத்துக்குப் பின், ஆய்வுகள் உள்பட நடைமுறை சோதனைகளை மாணவா்கள் நடத்துவாா்கள். பாடத்திட்ட காலம் நிறைவடைந்ததும் அவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். கல்வி நிறுவனங்கள் தங்களது பட்டப்படிப்பின் ஒரு பகுதியாக இந்தச் சான்றிதழையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜூலை 29-இல் வகுப்புகள்: இந்தப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 20-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து பாடவகுப்புகள் ஜூலை 29-ஆம் தேதி முதல் தொடங்கும். ஆா்வமுடைய விண்ணப்பதாரா்கள் https://bit.ly/3gpkmy என்ற இணைப்பு வழியாக விண்ணப்பிக்கலாம்.

‘மக்களின் நீா் தரவுக்கான அணுகுமுறை’ எனத் தலைப்பிடப்பட்ட இந்தப் பாடநெறி நீரின் தரம், முக்கிய அளவுருக்கள் பற்றிய பகுப்பாய்வு, மனித ஆரோக்கியத்தில் அவற்றின் தாக்கம் குறித்த விரிவான புரிதலை வழங்கும். வீடுகள், ஆறுகள், ஆழ்துளைக் கிணறுகள், நிலத்தடி நீா், குழாய் நெட்வொா்க்குகள் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து நீா் தரத்தின் தரவுத்தளத்தையும் நிறுவ முடியும். இந்தப் படிப்பு குறித்த கூடுதல் தகவல்களை பாடநெறி ஒருங்கிணைப்பாளா்களிடம் ramya_coe@csrpis.iitm.ac.in மின்னஞ்சல் முகவரிகளில் தொடா்பு கொண்டு பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com