
துமகுரு: வால்மீகி பழங்குடியினா் வளா்ச்சிக் கழகத்தின் நிதியை மோசடி செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பின்னணியில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் பி.நாகேந்திரா, எம்எல்ஏ பசனகௌடா தத்தால் வீடுகளில் அமலாக்கத் துறையின் சோதனைகள் தேவையற்றது என்று கர்நாடக துணை முதல்வர் டி கே சிவக்குமார் தெரிவித்தார்.
கா்நாடக அரசின் மகரிஷி வால்மீகி பழங்குடியினா் வளா்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகளில் இருந்து சட்ட விரோதமாக வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 187 கோடி நிதி மாற்றப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
ஹைதராபாத்தைச் சோ்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டுறவு வங்கிக் கணக்குகளுக்கு சட்ட விரோதமாக ரூ. 88.62 கோடி மாற்றப்பட்டுள்ளதும் இதில் அடங்கும். இதற்கிடையே வளா்ச்சிக் கழகத்தின் நிதி கண்காணிப்பாளா் சந்திரசேகரன் மே 26 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டாா்.
அப்போது, அவா் எழுதி வைத்திருந்த கடிதத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் குறித்து குறிப்பிட்டிருந்தாா். இதைத் தொடா்ந்து, பழங்குடியினா் நலத்துறை அமைச்சராக இருந்த பி.நாகேந்திரா, தனது பதவியை ஜூன் 6 ஆம் தேதி ராஜிநாமா செய்தாா்.
மாநில அரசின் உத்தரவின் பேரில், இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்வதற்கு உதவியாக இருந்த யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா அளித்த புகாரின் பேரில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த வழக்குத் தொடா்பாக 11 பேரை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. இதுவரை ரூ. 14.5 கோடி மீட்கப்பட்டுள்ளது. பெங்களூரில் செவ்வாய்க்கிழமை முன்னாள் அமைச்சா் பி.நாகேந்திரா, வளா்ச்சிக் கழகத்தின் தலைவரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான பசனகௌடா தத்தால் ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு எட்டு மணி நேரம் விசாரணை நடத்தியது.
இந்தநிலையில், முன்னாள் அமைச்சா் பி.நாகேந்திரா, காங்கிரஸ் எம்எல்ஏ பசனகௌடா தத்தால், வளா்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநா் ஜெ.ஜெ.பத்மநாப், கணக்கு அதிகாரி பரசுராம், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் மூன்று அதிகாரிகள் ஆகியோருக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் புதன்கிழமை அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். இந்தச் சோதனையில் வழக்குத் தொடா்பான முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினா்.
பெங்களூரு, பெல்லாரியில் பி.நாகேந்திராவுக்குச் சொந்தமான வீடுகள், பசனகௌடா தத்தாலுக்குச் சொந்தமான வீடு, பெங்களூரு, வசந்த நகரில் உள்ள வளா்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட இடங்களில் புதன்கிழமை அதிகாலை 3.30 மணிமுதல் இச்சோதனை நடைபெற்றது.
முன்னாள் அமைச்சா் பி.நாகேந்திராவின் தனிச் செயலாளா் ஹரீஷ், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. சோதனைகளின்போது கா்நாடக போலீஸாருக்குப் பதிலாக, மத்திய ஆயுத காவல் படையின் பாதுகாப்பை அமலாக்கத் துறை பெற்றிருந்தது.
இந்த நிலையில், வால்மீகி பழங்குடியினா் வளா்ச்சிக் கழகத்தின் நிதியை மோசடி செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பின்னணியில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் பி.நாகேந்திரா, எம்எல்ஏ பசனகௌடா தத்தால் வீடுகளில் அமலாக்கத் துறையின் சோதனைகள் தேவையற்றது என்று கர்நாடக துணை முதல்வர் டி கே சிவக்குமார் தெரிவித்தார்.
செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது: "மாநில அரசால் அமைக்கப்பட்ட இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது; இந்த வழக்கில் அமலாக்கத் துறையின் சோதனைகள் தேவையில்லை" என்றார்.
முன்னாள் அமைச்சர் நாகேந்திரன் வீடு உட்பட பல இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
சிவக்குமார் மேலும் கூறுகையில், "சட்ட விரோதமாக வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பெரும் தொகை மாற்றப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது, எனவே இந்த வழக்கை விசாரிக்க வங்கிகளுக்கு அதிகாரம் உள்ளது. அமலாக்கத் துறை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் அமலாக்கத் துறை விசாரணைக்கு வந்துள்ளது" என்றார்.
ஏற்கனவே சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வரும் நிலையில் அமாலக்கத் துறை விசாரணை ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "நாகேந்திரன் மீது எந்த தவறும் இல்லை. விசாரணைக்குப் பிறகு அவர் வெளியே வருவார் என்று நான் நம்புகிறேன். இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். முந்தைய பாஜக ஆட்சியின் போது இதுபோன்ற வழக்குகள் இருந்தன.
மேலும், இந்த வழக்கில் நாகேந்திரனுக்கும் வால்மீகி வளா்ச்சிக் கழக தலைவர் பசனகௌடா தத்தாலுக்கும் தொடர்பு இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.
அப்போது அவர் கூறுகையில், " சோதனை விவரம் தெரியவில்லை. இந்த வழக்கில் நாகேந்திரன், தத்தாலுக்கு சிறப்பு புலனாய்வுக் குழு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதுவரை நடந்த விசாரணையில் அமைச்சர் மற்றும் எம்எல்ஏவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
நோனவினகெரே மடத்திற்கு வருகை தந்க சிவக்குமார், தான் இங்கு நீண்ட நாள்களாக வருவதாகக் கூறினார்.
"இங்கு வந்து செல்வது எனது நம்பிக்கை. நான் ஹந்தனகெரே மடத்திற்கு செல்லவில்லை, ஆனால் சித்தேஸ்வரா கோயிலுக்கு சாலை வசதி செய்து கொடுத்துள்ளேன். வனத்துறையின் ஆட்சேபனைகளை ஆய்வு செய்வதற்காக அங்கு சென்றதாக்" கூறினார்.
சன்னப்பட்டணா இடைத்தேர்தல் குறித்து பேசிய அவர், தான் சிறந்த வேட்பாளர் என்று கூறினார்.
சன்னப்பட்டனத்தில் யார் போட்டியிட்டாலும் நானே வேட்பாளர்” என விளையாட்டாக கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.