மைக்ரோசாப்ட் முடக்கம்! உலகின் பல செயல்பாடுகள் ஸ்தம்பித்தன!

உலகளவில் விமான சேவை, வங்கி, ஊடகங்கள் மற்றும் பல நிறுவனங்களின் பல செயல்பாடுகள் ஸ்தம்பித்தன.
மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட்(கோப்புப் படம்)
Published on
Updated on
2 min read

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலக அளவில் விமான சேவைகள், வங்கி, ஊடகங்கள் மற்றும் பல நிறுவனங்களின் பெரும்பாலான செயல்பாடுகள் ஸ்தம்பித்தன.

இதனிடையே, மைக்ரோசாப்ட் 365 செயலியின் சேவைகளைப் படிப்படியாக ஊழியர்கள் சரிசெய்வதாக அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா சேவைகள், ஏடிடி பாதுகாப்பு, அமேசான், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்டா உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்களில் ஏற்பட்ட பாதிப்புகளைஇணையதள தடைகளைக் கண்காணிக்கும் டவுன் டிடெக்டெர் பதிவு செய்துள்ளது.

விமான நிறுவனங்கள், தகவல் தொடர்பு வழங்கும் சேவை மையங்கள், வங்கிகள், ஊடக ஒளிபரப்பு நிறுவனங்களும் இந்த மென்பொருளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய செய்தி தொலைக்காட்சி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. நியூஸிலாந்திலும் சில வங்கிகளில் இணையதள வசதி தூண்டிக்கப்பட்டு ஆஃப்லைனில் செயல்படுவதாக தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மைக்ரோசாப்ட் 365 நிறுவனம் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ முடங்கிய இணையதளத்தைச் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், சேவையைச் சீரமைக்க தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மைக்ரோசாப்ட்
உலகளவில் முடங்கிய மைக்ரோசாப்ட் மென்பொருள்: விமான சேவைகள் பாதிப்பு!

இதுதொடர்பான மக்கள் எழுப்பிவரும் எந்தக் கேள்விகளுக்கு எவ்வித விளக்கத்தையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவிக்கவில்லை. இந்த செயலிழப்புக்கான எந்தக் காரணத்தையும் தெரிவிக்கவில்லை.

ஸ்தம்பித்த விமான சேவை நிறுவனங்கள்

இதற்கிடையில் விமான சேவை நிறுவனங்கள்தான் அதிகளவில் இடையூறுகளைச் சந்தித்துள்ளன.

அமெரிக்காவில் யுனைடட், அமெரிக்கன், டெல்டா, அலெஜியண்ட் விமானங்கள் தகவல் தொழில்நுட்பக் கோளாறால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதாக ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று பிரிட்டனில் விமான சேவைகள், ரயில் சேவைகள், தொலைக்காட்சி நிறுவனங்கள், கணினி சேவையும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.

பட்ஜெட் விமான சேவை நிறுவனமான ரியான் ஏர், டிரான்ஸ்பெனைன் எக்ஸ்பிரஸ், கோவியா தேம்ஸ்லிங்க் ரயில்வே, ஒளிபரப்பாளரான ஸ்கை நியூஸ் ஆகியவையும் பாதிக்கப்பட்டவற்றில் அடங்கும்.

இதுகுறித்து பட்ஜெட் விமான சேவை நிறுவனம் கூறுகையில், “உலகளாவிய தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக நாங்கள் தற்போது இணையதள இடையூறுகளை அனுபவித்து வருகிறோம். இது தற்போது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. முன்பதிவு செய்த பயணிகள் தயவுசெய்து பதிவுசெய்யப்பட்ட மூன்று மணி நேரத்துக்கு முன்பாக விமான நிலையத்துக்கு வர அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்றும் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய விமான நிலையங்களிலும் இந்த வகை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அங்கு சில பயணிகள் ஆன்லைன் செக்-இன் சேவை முடக்கப்பட்டதால் சிக்கித் தவித்தனர். மெல்பர்னில் உள்ள பயணிகள் செக்-இன் செய்ய ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்றனர்.

ஆம்ஸ்டர்டாமின் ஷிபோல் விமான நிலையம் அதன் இணையதளத்தில் இந்த செயலிழப்பு, விமானங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளது.

மைக்ரோசாப்ட்
மைக்ரோசாஃப்ட் பிரச்னை: கைகளால் எழுதப்படும் போர்டிங் பாஸ்

கோடை விடுமுறையின் தொடக்கத்தில், பரபரப்பான நாட்களில் விமான சேவையில் தடை ஏற்பட்டதால் பலரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

ஜெர்மனியில், பெர்லின் விமான நிலையம் வெள்ளிக்கிழமை காலை, “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, செக்-இன் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காலை 10 மணி வரை விவரங்கள் எதுவும் தெரிவிக்காமல், விமானங்கள் நிறுத்தப்பட்டதாக ஜெர்மன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரோமின் லியோனார்டோ டா வின்சி விமான நிலையத்தில், அமெரிக்கா செல்லும் சில விமானங்கள் தாமதமாக செல்வதாக தெரிவிக்கப்பட்டது.

சில செய்தி வாசிப்பாளர்கள் இருண்ட அறைகளில் கணினியில் தோன்றிய நீல நிறத் திரைகளை நேரடியாக ஒளிபரப்பினர்.

பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்களில் பணப்பரிமாற்ற சேவைகள் முடக்கப்பட்டதால் பலராலும் சேவைகளை தொடர முடியவில்லை.

நியூசிலாந்து வங்கிகளான ஏஎஸ்பி மற்றும் கிவி பேங்க் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து எக்ஸ் பயனாளர் ஒருவர் வெளியிட்ட பதிவில், “பால்கன் சென்சார் இயங்குதளத்துடன் தொடர்புடைய விண்டோஸ்களில் ஏற்படும் செயலிழப்புகளின் அறிக்கைகள் பற்றி நிறுவனம் அறிந்திருப்பதாகக் கூறியது. கடவுச்சொல் பாதுகாக்கப்பட்ட கிரௌட் ஸ்ட்ரைக் தளத்தில் எச்சரிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், அதைச் சரிபார்க்க முடியவில்லை. கிரௌட் ஸ்ட்ரைக் கருத்துக்கான கோரிக்கைகளுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com