
தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில் மீன்களை பதப்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு அந்த ஆலையில் திடீரென அமோனியா வாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அந்த ஆலை முழுவதும் அமோனியா வாயு பரவியதால், அங்கு பணியில் இருந்த கும்பகோணம் பகுதியை சேர்ந்த 5 பெண்கள் மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 16 பெண்கள் என மொத்தம் 21 பேருக்கு மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர்.
இதையடுத்து, உடனடியாக அவர்கள் அனைவரையும் மீட்கப்பட்டு தூத்துக்குடியில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து தீயை அணைத்தனர். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிற்கப்பட்டது.
மேலும், இது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் முரளி தலைமையிலான குழுவினர் அந்த தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
இது தொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, டிசம்பர் மாதம், எண்ணூரில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் உர உற்பத்தி நிலையத்தில் இருந்து அம்மோனியா வாயு கசிந்ததையடுத்து, அதனை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.