மத்திய அரசின் மீது முதல்வா் ஸ்டாலின் வீண் பழியைச் சுமத்துவதா? - அண்ணாமலை
சென்னை: கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட முழுமையாக நிறைவேற்றாமல், நேரத்திற்கொரு பேச்சு என்று நாடகமாடி, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், அரசியலில் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, மத்திய அரசின் மீது வீண் பழியைச் சுமத்துவதா? என தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2014 - 2024 வரையிலான, பத்து ஆண்டுகளில், தமிழகத்துக்கு வழங்கிய நலத்திட்டங்களின் மதிப்பு ரூ.10.76 லட்சம் கோடி. தமிழகத்தின் நேரடி வரிப்பங்கீடை விட, இது இரண்டு மடங்கு அதிகம். ஆனால், மத்திய அரசின் பங்கு என்ன, மாநில அரசின் பங்கு என்ன என்று எதுவும் தெரியாமல், வழக்கம்போல யாரோ எழுதிக் கொடுத்ததை அப்படியே பதிவிட்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கடந்த 2006 தேர்தலின்போது, திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியான, கிழக்கு கடற்கரைச் சாலை விரிவாக்கப் பணிகள் தற்போது, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள ரூ.9,386 கோடி நிதியில்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பது முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரியுமா அல்லது பணிகள் நிறைவடைந்ததும் திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா?
திமுகவின் மற்றொரு தேர்தல் வாக்குறுதியான மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்கு, மத்திய அரசு ரூ.5,800 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதை முதல்வர் ஸ்டாலின் மறந்து விட்டாரா அல்லது மறைக்க முயற்சிக்கிறாரா?
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு நமது மத்திய அரசு சுமார் ரூ. 2 லட்சம் கோடி செலவு செய்ய ஒப்புதல் வழங்கிய விவரமாவது முதல்வருக்குத் தெரியுமா?
கடந்த 2009 - 2014 வரையில் ஆட்சியில் இருந்த திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு, தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்தது சுமார் ரூ. 800 கோடி மட்டுமே. ஆனால், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி,இந்த ஆண்டு மட்டும் ரூ.6,331 கோடிக்கான ரயில்வே திட்டங்களைத் தமிழகத்துக்கு வழங்கியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் உண்மையில் இவை எல்லாம் தெரிந்துதான் பேசிக் கொண்டிருக்கிறாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை, பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வழங்கினார். ஆனால், மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைப்போம் என்று வாக்குறுதி கொடுத்த திமுக, அமைத்த அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை எத்தனை?
பால் விலை, தயிர் விலை, சொத்து வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், பத்திரப் பதிவுக் கட்டணம், என அனைத்தையும் பல மடங்கு உயர்த்தி, நடுத்தர மக்கள் வாழ்க்கையில் பெரும் பொருளாதாரச் சுமையை ஏற்றிவிட்டு, வருமானவரி குறித்துப் பேசக் கூச்சமாக இல்லையா?
கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட முழுமையாக நிறைவேற்றாமல், நேரத்திற்கொரு பேச்சு என்று நாடகமாடி, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், அரசியலில் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, மத்திய அரசின் மீது வீண் பழியைச் சுமத்துவதா?
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு எண்ணற்ற நலத் திட்டங்களை நிறைவேற்றிய நமது பிரதமர் மோடி வரும் காலங்களிலும் தமிழகத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவார். ஆனால் இங்கு திமுக அரசோ, தாங்கள் செய்யவேண்டிய பணிகளை மறந்து மற்றவர்களை விமர்சிப்பதை முழு நேர வேலையாகக் கொண்டுள்ள போக்கை இனி வரும் காலங்களிலாவது மாற்றிக் கொள்ள வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.