
சென்னை ராயப்பேட்டையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஆழ்துளையிடும் பணியை அமைச்சர் உதயநிதி தொடக்கி வைத்தார்.
ராயப்பேட்டை - டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை இடையே 910 மீட்டர் ரயில் செல்லும் வகையில் துளையிடப்படுகிறது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ராயப்பேட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளின் 3வது வழித்தடத்தில் ராயப்பேட்டை முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வரை சுரங்கம் அமைக்கும் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு தொடக்கி வைத்தார்.
குறிப்பாக ராயப்பேட்டையில் இருந்து ஆர்.கே.சாலை வரை மொத்தம் 910 மீட்டர் தொலைவிற்கு பவானி என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலம் சுரங்கம் அமைக்கும் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
மேலும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
இந்த ஆய்வில் நடைபெற்று வரும் பணிகளில் எத்தனை சதவிகிதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்பது குறித்து உடன் இருந்த மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.
ராயப்பேட்டையை தொடர்ந்து, ஆலப்பாக்கம் இரண்டு அடுக்கு மெட்ரோ இரயில் பாதை, பூவிருந்தவல்லி புறவழி மெட்ரோ ரயில் நிலையம், பூவிருந்தவல்லி மெட்ரோ பணிமனை உள்ளிட்ட நான்கு இடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கலந்து கொண்டனர்.
இது குறித்து அமைச்சர் உதயநிதி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாடு அரசின் நிதி ஒதுக்கீடு - பிற நிதி ஆதாரங்கள் மூலம் நடைபெற்று வரும் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள் மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் தொடர்பான உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தை சிறப்புத்திட்டச் செயலாக்கத்துறை சார்பில் குறிஞ்சி முகாம் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் போது, ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபெற்று வரும் மெட்ரோ திட்டப் பணிகள் - அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்ற தகவல்களை அதிகாரிகள் - அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.
விரிவானத் திட்ட அறிக்கைகள் - சாத்தியக்கூறு அறிக்கைகள் - வழித்தடம் மற்றும் பணிகள் நடைபெறும் இடங்களின் வரைபடங்கள் போன்றவற்றை காண்பித்து, மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளையும் - ஒருங்கிணைந்த பொதுப்போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதற்கான அம்சங்களையும் அதிகாரிகள் விளக்கிக் கூறினர்.
இப்பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் படிப்படியாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் அறிவுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.