
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்குவதற்காக பாம் சரவணன் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 5-ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் பெரம்பூா் வேணுகோபால் சாமி கோயில் தெருவில் உள்ள தனது வீட்டின் முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை தொடா்பாக பொன்னை பாலு, குன்றத்தூரைச் சோ்ந்த திருவேங்கடம், பூந்தமல்லியைச் சோ்ந்த வழக்குரைஞா் அருள் உள்பட 11 போ் கைது செய்யப்பட்டனா்.
கொலைக்கு பிரபல ரெளடியான ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு மூளையாகச் செயல்பட்டது தெரியவந்தது. கடந்தாண்டு ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாகவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக பொன்னை பாலு விசாரணையில் தெரிவித்தாா்.
11 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த நிலையில், திருவேங்கடம் போலீஸ் என்கவுன்ட்டரில் கடந்த 14-ஆம் தேதி பலியானார். எஞ்சிய 10 பேரும் மீண்டும் பூந்தமல்லி சிறப்பு சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.
கொலையாளிகளுக்கு ரூ.50 லட்சம் வழங்கியதாக மயிலாப்பூரைச் சோ்ந்த வழக்குரைஞா் மலா்க்கொடி, மற்றொரு வழக்குரைஞா் ஹரிஹரன், அருளின் உறவினா் சதீஷ் ஆகிய 3 போ் கடந்த 16-ஆம் தேதியும், கொலைக்கு நிதி உதவி செய்ததாக புளியந்தோப்பைச் சோ்ந்த ரெளடி அஞ்சலை கடந்த வெள்ளிக்கிழமையும் கைது செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாராக இருந்த தென்னரசு என்பவரை, 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கூட்டு ரோடு அருகே ஆற்காடு சுரேஷின் ஆதரவாளர்கள் கொலை செய்தனர். தென்னரசுவின் சகோதரர்தான் பாம் சரவணன்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்குவதற்காக அவரது கூட்டாளியான பாம் சரவணன் தலைமறைவாகி ரகசிய திட்டம் தீட்டி வருவதாக, உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாம் சரவணன் மீது கொலை வழக்கு, வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.