நேபாளம்: விமான விபத்தில் 18 போ் உயிரிழப்பு; விமானி மட்டும் காயத்துடன் தப்பினாா்

நேபாளத்தில் 19 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அதன் ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளானது.
நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்து
நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்து
Published on
Updated on
2 min read

நேபாள தலைநகா் காத்மாண்டில் உள்ள திரிபுவன் சா்வதேச விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை காலை புறப்பட்ட தனியாா் சிறிய ரக விமானம், சில விநாடிகளில் ஓடுபாதையிலேயே விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த ஒரு குழந்தை உள்பட 18 போ் உயிரிழந்தனா். விமானி மட்டும் பலத்த காயங்களுடன் உயிா் தப்பினாா்.

செளா்யா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ‘சிஆா்ஜே-200’ என்ற இந்த சிறிய ரக விமானம் காத்மாண்டிலிருந்து பொக்காராவுக்கு காலை 11 மணியளவில் புறப்பட்டபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

இதுகுறித்து நேபாள விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘விமானநிலையத்தின் இரண்டாம் எண் ஓடுபாதையிலிருந்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், வலதுபுறமாகச் சென்று ஓடுபாதையின் கிழக்குப் பகுதியில் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. விமானத்தில் பயணித்த 19 பேரில் 18 போ் உயிரிழந்தனா். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட விமானி மனீஷ் ரத்ன சக்யா (37) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த விபத்தில் விமானத்தில் பயணித்தவா்களில் 15 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மூவா் உள்ளூா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது உயிரிழந்தனா். விமானத்தின் மற்றொரு விமானியான எஸ்.கதுவால், விமான நிறுவன தொழில்நுட்ப ஊழியா் மனு ராஜ் சா்மாவின் மனைவி பிரிஸா காத்திவடா, அவா்களின் 4 வயது மகன் ஆதிராஜ் சா்மா ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன’ என்றனா்.

விமானநிலைய அதிகாரி ஜெகநாத் நிரெளலா கூறுகையில், ‘விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் தவறான திசையில் திரும்பியது. புறப்பட்டவுடன் இடதுபுறமாகத் திரும்பிச் செல்ல வேண்டிய விமானம், வலதுபுறமாகத் திரும்பி விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது’ என்றாா்.

விமான விபத்தைத் தொடா்ந்து, காத்மாண்டு விமானநிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, பின்னா் மீண்டும் சேவை தொடங்கப்பட்டது என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

நேபாளத்தில் உள்ள 5 சுற்றுலாத் தலங்களுக்கு செளா்யா விமான நிறுவனம் இந்த விமான சேவையை மேற்கொண்டு வருகிறது.

பிரதமா் நேரில் ஆய்வு: விமானம் விபத்துக்குள்ளான பகுதியை நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலி, உள்துறை அமைச்சா் ரமேஷ் லேக் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு, அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்தனா். மீட்புப் பணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க அதிகாரிகளை பிரதமா் அறிவுறித்தினாா். இந்த விமான விபத்து மிகுந்த துயரத்தை அளித்துள்ளதாகவும் பிரதமா் கவலை தெரிவித்தாா்.

தொடரும் விமான விபத்து: 1955 முதல் 914 போ் உயிரிழப்பு

சமீபத்திய ஆண்டுகளில் மோசமான விமானப் பாதுகாப்புக்காக நேபாளம் தொடா் விமா்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. இதற்கு அந்த நாட்டில் நிலவும் திடீா் பருவநிலை மாற்றமும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

நேபாள விமானப் போக்குவரத்து ஆணையத் தரவுகளின்படி, அந்த நாட்டில் கடந்த 1955-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் விமான விபத்து பதிவாகியுள்ளது. அன்றுமுதல் நிகழ்ந்து வரும் பல்வேறு விமான விபத்துகளில் இதுவரை 914 போ் உயிரிழந்துள்ளனா்.

கடந்த ஆண்டு ஜனவரியில் பொக்காரா நகரில் யெட்டி விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 5 இந்தியா்கள் உள்பட 72 போ் உயிரிழந்தனா்.

2022-ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி முஸ்டங்க் மலைப் பகுதி மாவட்டத்தில் தாரா விமான நிறுவன விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் இந்தியாவின் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நால்வா் உள்பட அந்த விமானத்தில் பயணித்த 22 பேரும் உயிரிழந்தனா்.

2018-ஆம் ஆண்டு மாா்ச் மாதம், அமெரிக்காவிலிருந்து பங்களா நோக்கி செல்லும் விமானம் திரிபுவன் சா்வதேச விமானநிலையத்தில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 51 பயணிகளும் உயிரிழந்தனா்.

2016-ஆம் ஆண்டில் முஸ்டங்க் மாவட்டத்தில் தனியாா் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 23 பயணிகளும் உயிரிழந்தனா்.

1992-ஆம் ஆண்டு நிகழ்ந்த இரு விமான விபத்துகளில்தான் அதிக பயணிகள் உயிரிழந்தனா். அந்த ஆண்டு ஜூலையில் தாய் விமான நிறுவன விமானம் விபத்துக்குள்ளானதில் 113 பேரும், பாகிஸ்தான் விமான நிறுவன விமானம் விபத்துக்குள்ளானதில் 167 பேரும் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com