
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று தில்லியில் சந்தித்தார்.
புதுதில்லியில் இன்று (ஜூலை 25) தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலையும், மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர்கள் வி. சோமண்ணா, மற்றும் ராஜ் பூஷன் செளத்திரியும் சந்தித்து தமிழ்நாட்டின் பன்மாநில நதிநீர் பிரச்னைகள், நதிநீர் இணைப்பு திட்டங்களை செயல்படுத்துதல், பாசன கட்டமைப்புகளை சீரமைக்கும் திட்டங்களுக்கு நிதியுதவி பெறுதல் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினார்கள்.
மேலும், காவிரி பிரச்னை, கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம், காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம், முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுதல், பெண்ணையாறு பன்மாநில நீர் பிரச்னைக்கு தீர்வு காண ஒரு நடுவர் மன்றம் அமைத்தல், குளங்கள் சீரமைப்பு திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கு நிதியில் உள்ள நிலுவை தொகையை விரைவில் வழங்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த சந்திப்பில் தமிழ்நாடு அரசின் தில்லிக்கான சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் கே. மணிவாசன், தமிழ்நாடு அரசின் கூடுதல் உள்ளுறை ஆணையர் (தமிழ்நாடு இல்லம்) ஆஷிஷ் குமார், இ. ஆ.ப., மற்றும் தலைவர், காவிரி தொழில்நுட்ப குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர் பிரிவு ஆர். சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.