மருத்துவ குணம் கொண்டதுதான் செம்பருத்தி! நயன்தாரா சர்ச்சையில் சித்த மருத்துவர் விளக்கம்!

மருத்துவ குணம் கொண்டதுதான் செம்பருத்தி. இருப்பினும் நோய்நிலைகளுக்கு மருந்து மாத்திரைகளுக்கு பதிலாக செம்பருத்தி பூ டீ-யை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் பிற மருந்துகளுடன் இதனையும் சேர்த்துக் கொள்வது நல்லது
செம்பருத்தி
செம்பருத்தி
Published on
Updated on
2 min read

செம்பருத்தி பூவின் மருத்துவ பயன் குறித்த பதிவு சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், மருத்துவ குணம் கொண்டதுதான் செம்பருத்தி. இருப்பினும் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, உடல் பருமன் ஆகிய நோய்நிலைகளுக்கு மருந்து மாத்திரைகளுக்கு பதிலாக செம்பருத்தி பூ டீ-யை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் , பிற மருந்துகளுடன் இதனையும் சேர்த்துக் கொள்வது நல்லது என்று சித்த மருத்துவர் சோ. தில்லை வாணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள இவர், திரைப்படங்களில் மட்டுமல்லாமல், ஃபேமி9 என்கிற அழகுசாதனப் பொருள்களை விற்கும் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “செம்பருத்திப் பூ தேநீர் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இதனை, என் உணவுத்திட்டத்தில் கொண்டு வந்தவர் ஊட்டச்சத்து நிபுணர் கெனரிவால். இந்தத் தேநீர் ஆயுர்வேதத்தில் நீண்டகாலமாக பயன்படுத்தப்படுகிறது. இது சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்க உதவுகிறது. இதை எப்படி செய்ய வேண்டும் என விரும்புபவர்கள் மருத்துவர் கெனரிவாலை தொடர்பு கொள்ளுங்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த சர்ச்சைக்கு பிறகு நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கிய பதிவு
இந்த சர்ச்சைக்கு பிறகு நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கிய பதிவு

இதனைத் தொடர்ந்து கல்லீரல் மருத்துவர் சிரியாக் ஏபி பிலிப்ஸ், ”செம்பருத்தி தேநீர் இதையெல்லாம் குணப்படுத்தும் என எந்த ஆய்வும் நிருபிக்கவில்லை. உங்களை 87 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர் என்பதால் மருத்துவம் சார்ந்த குறிப்புகளைச் சொல்லும் போது கவனமாகவும் பொறுப்பாகவும் நடந்துகொள்ள வேண்டும். இது, உங்கள் ஊட்டச்சத்து நிபுணருக்கான விளம்பரம்போல் தெரிகிறது. இந்தத் தேநீர் குறித்து எந்த ஆதாரமும் இல்லாததால், யாரும் இதைத் தொடர்ச்சியாக அருந்த வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.

இந்த சர்ச்சைக்கு பிறகு தனது இன்ஸ்டாகிராம் பதிவை அங்கிருந்து நீக்கியுள்ளார் நயன்தாரா. முன்னதாக, இதே மருத்துவர் தான் நடிகை சமந்தாவின் ஹைட்ரஜன் பெராக்சைடு பயன்பாடு தொடர்பான பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மருத்துவ குணம் கொண்டதுதான் செம்பருத்தி. இருப்பினும் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, உடல் பருமன் ஆகிய நோய்நிலைகளுக்கு மருந்து மாத்திரைகளுக்கு பதிலாக செம்பருத்தி பூ டீ-யை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் , பிற மருந்துகளுடன் இதனையும் சேர்த்துக் கொள்வது நல்லது என்று சித்த மருத்துவர் சோ. தில்லை வாணன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் மட்டுமின்றி பாரம்பரிய மருத்துவத்தை கிரீடமாக கொண்டிருக்கும் சீனா, மெக்சிகோ போன்ற நாடுகளிலும் அதிகம் பயன்படுத்தக்கூடிய மருத்துவ மூலிகையாக இருப்பது செம்பருத்தி எனும் செம்பரத்தை.

ஹைபிஸ்கஸ் ரோசா சைனன்சிஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட செம்பரத்தையின் பூவிற்கு மருத்துவ குணங்கள் ஏராளம் என்கிறது பாரம்பரிய மருத்துவ முறைகளும், நவீன ஆய்வுகளும்.

செம்பருத்தி பூவின் நிறத்திற்கு காரணமான ஆந்தோசைனின் எனும் நிறமிச் சத்துக்கள் அதன் பல்வேறு மருத்துவ குணங்களுக்கு காரணமாகின்றன. முக்கியமாக இதய நோய்கள் என்று வருகின்ற போது 'செம்பருத்தி பூ டீ 'அதில் முக்கியத்துவம் பெறுகின்றது.

விளக்கம் பெற வேண்டுவோர்... drthillai.mdsiddha@gmail.com இ-மெயில் மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

பூவில் இயற்கை நிறமிச்சத்துக்கள் உள்ளதால் 'ஆன்டி ஆக்சிடன்ட்' எனும் மருத்துவச் செய்கையை கொண்டுள்ளது. இதனால் உடல் செல்களுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதுடன், புற்றுநோய் எனும் கொடிய நோய் நிலைக்கு காரணமாகும் ஆதாரத்தை தடுப்பதாக உள்ளது.

செம்பருத்திப் பூவில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் தன்மையுள்ள குர்சிடின், கேம்பரால், சயனிடின் ஆகிய பல்வேறு வேதிப்பொருட்கள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதில் உள்ள ஆன்தோ- சயனிடில் கல்லீரலை பாதுகாப்பதாக உள்ளது. இவை சார்ந்து பல்வேறு ஆய்வுகளும் உலக அரங்கில் நடைபெற்று வருவது வியப்பிற்குரியது.

மேலும் செம்பருத்திப் பூவில் உடலுக்கு அத்தியாவசிய வைட்டமின்களான வைட்டமின் பி1, பி2, பி6 மற்றும் விட்டமின் சி ஆகியனவும், இன்னும் பல்வேறு கனிம சத்துக்களும் இருக்கின்றன.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவும், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கவும், உடல் பருமனைக் குறைக்கவும், மன அழுத்தம் குறைக்கவும், நரம்புகளை வன்மைப்படுத்தவும், இதயத்தை பாதுகாக்க உதவுவதாகவும் எலிகளில் நடத்திய பல்வேறு ஆரம்பகட்ட சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

சித்த மருத்துவத்தில் செம்பருத்தியின் மருத்துவ குணத்தை தெளிவாக கூறியுள்ளனர். அதில் செம்பருத்தி பூவை மணப்பாகு செய்து பருகக் கூறியுள்ளனர். இது பித்தம் குறையவும், உடல் வெப்பத்தை குறைக்கவும், காய கல்பமாக உடலை அழியாமல் காக்கவும் உதவும்.

இவ்வளவு சிறப்புக்கள் வாழ்ந்த செம்பருத்திப் பூவை எடுத்துக் கொள்வது நிச்சயம் உடலுக்கு நன்மை பயக்கும்.

இருப்பினும் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, உடல் பருமன் ஆகிய நோய்நிலைகளுக்கு மருந்து மாத்திரைகளுக்கு பதிலாக செம்பருத்தி பூ டீ-யை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் , பிற மருந்துகளுடன் இதனையும் சேர்த்துக் கொள்வது நல்லது.

இது பெண்களுக்கு கருப்பையை பலமாக்கும். மாதவிடாயின் முன் உண்டாகும் குறிகுணங்களை குறைப்பதாகவும் உள்ளது. ஆனால் பிரசவித்த பெண்கள் செம்பருத்திப் பூ டீயை தவிர்க்க வேண்டும்.

மொத்தத்தில் செம்பருத்தி பூ போன்ற பாரம்பரிய மருத்துவம் குணமிக்க மூலிகைகளை அளவோடு, ஆலோசனையோடு பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com