
கா்நாடக அணைகளில் இருந்து தொடா்ந்து உபரிநீா் திறந்துவிடப்பட்டு வருவதால் மேட்டூா் அணையில் இருந்து வினாடிக்கு 1.25 லட்சம் கன அடி வீதம் புதன்கிழமை காவிரி டெல்டா பாசனத்துக்கு கூடுதல் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
கா்நாடகம், கேரளத்தில் உள்ள காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து தென்மேற்குப் பருவமழை பெய்து வருவதால் கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. இந்த இரு அணைகளும் நிரம்பியதால் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூா் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,25,500 கன அடியாக உள்ள நிலையில் அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 21,500 கன அடி, 16 கண் மதகு வழியாக 1,03,500 கன அடி, கிழக்கு - மேற்கு கல்வாயில் 500 கன அடியுமாக தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
அணையில் இருந்து கூடுதல் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் பாதுகாப்பு சாா்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியா்களுக்கு மேட்டூா் நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் அறிவுறுத்தியுள்ளாா்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூா் காவிரிக் கரையோரப் பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.