எந்தவொரு தலைவரின் சிலையும் அகற்றப்படவில்லை, இடம் மாற்றப்படுகின்றன: நாடாளுமன்ற செயலகம் விளக்கம்

நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து எந்த ஒரு தலைவரின் சிலையும் அகற்றப்படவில்லை.
எந்தவொரு தலைவரின் சிலையும் அகற்றப்படவில்லை, இடம் மாற்றப்படுகின்றன: நாடாளுமன்ற செயலகம் விளக்கம்
Published on
Updated on
2 min read

புது தில்லி: நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து எந்த ஒரு தலைவரின் சிலையும் அகற்றப்படவில்லை. அவர்களின் சிலைகள் முறையாகவும் மரியாதையுடனும் நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டு வருவதாக நாடாளுமன்ற செயலகம் விளக்கம் அளித்துள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தின் பிரதான தளத்தில் இடம் பெற்றிருந்த மகாத்மா காந்தி, பி.ஆர். அம்பேத்கர் மற்றும் சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் தற்போது இருந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு பழைய கட்டடத்தின் புல்வெளி பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா மற்றும் மகாராணா பிரதாப் ஆகியோரின் சிலைகளும் பழைய நாடாளுமன்ற கட்டடம் மற்றும் நாடாளுமன்ற நூலகத்துக்கு இடையே இடமாற்றம் செய்யப்படுகின்றன.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தக்கூடாது என்பதற்காகவே காந்தி, அம்பேத்கர், சிவாஜி போன்ற தலைவர்களின் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், தலைவர்களின் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு, மக்களவைச் செயலாளர் அளித்திருக்கும் விளக்கம் வெறும் மோசடி. இது குறித்து ஆளும் கட்சி, எந்த அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை மேற்கொள்ளவில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து எந்த ஒரு தலைவரின் சிலையும் அகற்றப்படவில்லை. அவர்களின் சிலைகள் முறையாகவும் மரியாதையுடனும் நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டு வருவதாக நாடாளுமன்ற செயலகம் விளக்கம் அளித்துள்ளது.

அதாவது, புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்ட பின்னர், நாடாளுமன்ற வளாகத்தை அழகுபடுத்துவதற்கும், பிரமாண்டமாகவும் கவர்ச்சிகரமானதாகவும் மாற்றும் வகையில், நாடாளுமன்றத்தின் உயரிய கண்ணியம் மற்றும் அலங்காரத்திற்கு ஏற்ப ஒரு செயல் திட்டம் உருவாக்கப்பட்டது.

அதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் தலைசிறந்த தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டன. நமது தேசத்தின் சுதந்திரத்திலும், தேசத்தின் கலாசார மற்றும் ஆன்மீக மறுமலர்ச்சியிலும், சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் ஜனநாயகப் பயணத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வதிலும் இந்த மாபெரும் தலைவர்களும் சுதந்திரப் போராட்ட வீரர்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர். இந்த மகத்தான வீரர்கள், தங்கள் வாழ்க்கை, தத்துவம் மற்றும் சேவைகள் பணி மூலம், நாட்டின் பழங்குடி பெருமையை நிலைநிறுத்தி, சுரண்டப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தனர். நமது தேசத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு அவை உத்வேகத்தின் ஆதாரமாகவே உள்ளன.

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு இடங்களில் தலைவர்களின் சிலைகள் அமைந்துள்ளதால், பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வசதியாக இல்லை.

எனவே, தலைவர்கள் சிலைகள் அனைத்தும் நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான பிரேர்னா ஸ்தல் எனும் தலைவர்கள் அருங்காட்சியக பூங்கா நிறுவப்பட உள்ளன.

நாடாளுமன்ற வளாகத்தை பார்வையிட வரும் பார்வையாளர்கள், தலைவர்களின் சிலைகளை எளிதில் பார்வையிடும் வகையிலும், அவர்களின் வாழ்க்கை மற்றும் தத்துவத்தில் இருந்து உத்வேகம் பெறும் வகையிலும் பிரேர்னா ஸ்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பிரதான தளத்தில் நமது மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகள் குறித்து பார்வையாளர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விரிவான தகவல்களை வழங்கவும், அவர்களைச் சந்திக்க வரும் மக்கள் அவர்களின் வாழ்க்கை மற்றும் எண்ணங்களில் இருந்து உத்வேகம் பெறும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தேசத்தின் சிறந்த தலைவர்களின் சிலைகளை பார்வையிடும் பார்வையாளர்கள் தங்களது பணிவான அஞ்சலி மற்றும் மரியாதையும் செலுத்தும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற வளாகம் மக்களவைத் தலைவரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதும், கடந்த காலங்களில் மக்களவைத் தலைவரின் அனுமதியுடன் வளாகத்திற்குள் சிலைகள் மாற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து எந்த ஒரு தலைவரின் சிலையும் அகற்றப்படவில்லை. அவர்களின் சிலைகள் முறையாகவும் மரியாதையுடனும் நாடாளுமன்ற வளாகத்தில் பிரேர்னா ஸ்தல் எனப்படும் தலைவர்கள் அருங்காட்சியக பூங்கா தளத்தில் நிறுவப்பட்டு வருவதாக நாடாளுமன்ற செயலகம் விளக்கம் அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com