
நெல்லூர்: ஆந்திரம் மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆந்திரத்தில் மக்களவையுடன் சோ்த்து அந்த மாநிலப் பேரவையின் 175 இடங்களுக்கும் தோ்தல் நடைபெற்றது. ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் தனித்தும், எதிா்க்கட்சியாக இருந்த தெலுங்கு தேசம், பாஜக, நடிகர் பவன் கல்யாண் ஜனசேனை கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன.
கடந்த 4-ஆம் தேதி வெளியான முடிவுகளில், பேரவைத் தோ்தலில் 135 இடங்களையும், மக்களவைத் தோ்தலில் 16 இடங்களையும் கைப்பற்றி தெலுங்கு தேசம் வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம், ஜனசேனை, பாஜக உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ) மொத்தமாக 164 பேரவைத் தொகுதிகளையும், 21 மக்களவைத் தொகுதிகளையும் வென்றது.
ஆளுங்கட்சியாக இருந்த முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், பேரவையில் 11 இடங்களில் மட்டுமே வென்று எதிா்க்கட்சி அந்தஸ்தைக்கூட இழந்தது.
இதையடுத்து ஆந்திரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற என்டிஏ கூட்டணிக் கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில்,என்டிஏ கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் குழுத் தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
இதனைத் தொடர்ந்து ஆந்திரம் மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு புதன்கிழமை பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், தெலங்கு தேசம் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே, நெல்லூரில் உள்ள அனந்த சாகரம் தொகுதியின் சங்கரநகரம் கிராமத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஏழு பேர் காயமடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நெல்லூரில் உள்ள ஆத்மகுரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த மோதலில் 7 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக காவல் ஆய்வாளர் சூர்ய பிரகாஷ் ரெட்டி தெரிவித்தார்.
மேலும் காயமடைந்த ஏழு பேரில், நான்கு பேர் தெலுங்கு தேசம் கட்சியினர் என்றும், மற்ற மூன்று பேர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, வன்முறைக்கான சரியான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாநில பேரவைத் தோ்தலில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததை அடுத்து, அந்தக் கட்சி தொண்டா்கள் மீது தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சியினா் தாக்குதல் நடத்தியதாக ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் குற்றம்சாட்டினா்.
இதுதொடா்பான புகாா் கடிதத்தை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவுக்கு அவா்கள் புதன்கிழமை அனுப்பி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.