
புது தில்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அவர் நீண்ட, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 54-ஆவது பிறந்தநாளை நாடு முழுவதும் புதன்கிழமை காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தலைவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ராகுல் காந்திக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கார்கே எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "வேற்றுமை, நல்லிணக்கம் மற்றும் இரக்கத்தில் ஒற்றுமை என்ற காங்கிரஸ் கட்சியின் நெறிமுறைகள் அனைத்தும் உங்களது எல்லா செயல்களிலும் தெரியும், உண்மையின் முகத்தை அதிகாரத்திற்குக் காட்டி
நாட்டில் உள்ள கடைசி ஏழையின் கண்ணீரைத் துடைக்கும் உங்களது பணியைத் தொடர்ந்திட வேண்டும். மேலும் நீண்ட, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
தில்லியில் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் இல்லம் மற்றும் கட்சித் தலைமையகத்தைச் சுற்றிலும் ராகுல் காந்தியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்து தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
அண்மையில் நடந்து முடிந்த 18-ஆவது மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, கேரளத்தின் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் ராகுல் காந்தி களம் கண்டாா். இரு தொகுதிகளில் வென்ற ராகுல், தோ்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ஆம் தேதியிலிருந்து 14 நாள்களுக்குள்(ஜூன் 18) ஏதேனும் ஒரு தொகுதியின் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டியது கட்டாயம்.
அதில் ரேபரேலி தொகுதியைத் தக்க வைப்பதாகவும், 3.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்த வயநாடு தொகுதி எம்.பி.யாகப் பதவியேற்கப் போவதில்லை என்று அறிவித்தார்.
ஜூன் 19, 1970 இல் பிறந்த காந்தி, மக்களவையில் ஐந்து முறை மக்களவை உறுப்பினராக உள்ளார்.
2004 ஆம் ஆண்டு ராகுல் காந்தி இந்திய அரசியலில் நுழைந்த ராகுல் காந்தி, தனது தந்தை ராஜீவ்காந்தி போட்டியிட்டு வென்ற உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதியில் தொகுதியில் போட்டியிட்டு மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2007 ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார்.
2022 செப்டம்பர் 7 ஆம் தேதி தெற்கே கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரையில் இந்தியா முழுவதும் நடந்தே சென்று மக்களைச் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். 4080 கிலோமீட்டர்கள் கொண்ட இந்த நடைப்பயணம் 2023 ஜனவரி 30 ஆம் தேதி காஷ்மீரில் முடிவடைந்தது.
ஜனவரி 2024 இல் பாரத் ஜோடோ நீதி யாத்திரையை நாட்டின் வடகிழக்கில் உள்ள மணிப்பூரிலிருந்து மேற்குக் கடற்கரையில் உள்ள மும்பை வரை பயணம் மேற்கொண்டார், 6,700 கிலோமீட்டர்கள் கொண்ட இந்த நடைப்பயணம் 2024 மார்ச் 16 ஆம் தேதி உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்த பயணம் இந்திய மக்களுக்கு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி என விரிவான பயணத்தை மேற்கொள்வதில் கவனம் செலுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.