
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த ரயில் விபத்துக்குப் பிறகு டிரைவர் பணிக்கான ஆள்சேர்ப்பை ரயில்வே வாரியம் மும்மடங்காக்கி உள்ளது.
மேற்கு வங்கத்தின் டாா்ஜீலிங் மாவட்டத்தில் பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்து நடந்து ஒரு நாளை கழித்து, பாதுகாப்பை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, திட்டமிட்டதைவிட மூன்று மடங்கு அதிகமாக உதவி லோகோ பைலட்களை(ரயில் ஓட்டுநர்) பணியமர்த்த வேண்டும் என்று ரயில்வே தெரிவித்தது.
திட்டமிடப்பட்ட 5,696 உதவி லோகோ பைலட்களுக்குப் பதிலாக, கூடுதலாக 18,999 உதவி லோகோ பைலட்களை மண்டலங்கள் முழுவதும் நியமிக்க வேண்டும் என்று பொது மேலாளர்களுக்கு எழுதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டலங்களில் எடுக்கப்பட்ட முடிவை உடனடியாக செயல்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டாலும், காலியிடங்களை நிரப்புவதற்கு குறைந்தபட்சம் 6 மாதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் விண்ணப்பதாரர்கள் எழுத்து, திறனறி மற்றும் மருத்துவப் பரிசோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டும். உதவி லோகோ பைலட்டுகளை பணியமர்த்தவதற்கு முன்பாக பயிற்சியும் அளிக்க வேண்டும்.
“ரயில்வே துறையில் திறமையான பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதே இந்த முடிவின் நோக்கமாகும். நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிபாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரயில்வே ஆள்சேர்ப்பு வாரியத்துடன் ஆலோசித்து, உதவி லோகோ பைலட்டுகளின் காலியிடங்களை நிரப்ப உடனடி நடவடிகை எடுக்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் மண்டலங்களுக்கு அறிவுறுத்தியது.
மண்டல ரயில்வேயில் இருந்து கூடுதல் உதவி லோகோ பைலட்களுக்கான கோரிக்கை வந்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.