
ஹஜ் பயணம் மேற்கொண்ட போது உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 4 பேரின் உடல்களையும் சௌதியிலேயே அடக்கம் செய்ய அவர்களின் உறவினர்கள் சம்மதம் தெரிவித்ததாக அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை ஜூன் 14-ல் தொடங்கியது. தியாக திருநாளைக் கொண்டாடும் வகையில் சௌதி அரேபியாவிலுள்ள புனித நகரமான மெக்காவில் இந்தாண்டு 18 லட்சம் பேர் வரை திரண்டுள்ளனர்.
புனித யாத்திரைக்கு வந்தவர்களில் வெப்பம் தாங்க முடியாமல் 922 பேர் உயிரிழந்துள்ளதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து 1.75 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்ட நிலையில், இதுவரை 80 பேர் வெப்பம் தாங்காமல் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “ ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரசிக்க பீவி (73), திருநெல்வேலியைச் சேர்ந்த மைத்தீன் பாத்து (73), சென்னையைச் சேர்ந்த நசீர் அஹமதும் (40), கரூரைச் சேர்ந்த லியாக்கத் அலி (72) ஆகியோர் இதய நோய் தொடர்பான பிரச்னைகளால் ஹஜ் செய்கின்றபோது மக்கா, அராபத், மினா ஆகிய இடங்களில் இயற்கை எய்தி உள்ளனர். இயற்கை எய்தியவர்கள் அனைவரும் அனைவரையும் சவூதியிலே அடக்கம் செய்ய அவர்களுடைய குடும்பத்தினர் ஒத்துக் கொண்டுள்ளனர். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.