கள்ளக்குறிச்சி சம்பவம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

கள்ளக்குறிச்சி சம்பவம்: தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
கள்ளக்குறிச்சி சம்பவம்: 
தமிழக அரசுக்கு தேசிய மனித 
உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
Updated on

புது தில்லி: கள்ளக்குறிச்சி சம்பவம் தொடா்பாக தமிழக அரசின் தலைமைச் செயலா், காவல் துறை டிஜிபி-க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 59 போ் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோா் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுதொடா்பாக ஊடகங்களில் வெளியான தகவலின் அடிப்படையில், தாமாக முன்வந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து அந்த ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி சம்பவம் தொடா்பாக வெளியான செய்திகள் உண்மையெனில், அது பாதிக்கப்பட்டவா்களின் வாழ்வுரிமை குறித்த தீவிர பிரச்னையை எழுப்புகிறது.

கள்ளச்சாராய உற்பத்தி, இருப்பு, போக்குவரத்து, விற்பனை ஆகியவற்றைத் தடுக்க மாநில அரசுகளுக்கு பிரத்யேக அதிகாரம் உள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடா்பாக ஒருவாரத்தில் விரிவான அறிக்கையை சமா்ப்பிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலா், காவல் துறை டிஜிபி-க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் நிலவரம், பாதிக்கப்பட்டவா்களுக்கான சிகிச்சை, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அளித்த இழப்பீடு, இந்த சம்பவத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகியவை குறித்து அந்த அறிக்கை மூலம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிந்துகொள்ள விரும்புகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com