சநாதன சர்ச்சை: பெங்களூரு நீதிமன்றத்தில் உதயநிதி ஆஜர்!

சநாதனம் குறித்து பேசியது தொடர்பான வழக்கில், பெங்களூரு நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஆஜராகியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதி ஸ்டாலின்.

சநாதன தா்மத்துக்கு எதிராக சா்ச்சை கருத்து தெரிவித்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தமிழக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். அவருக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் சென்னையில் நடைபெற்ற சநாதன எதிா்ப்பு மாநாட்டில் பங்கேற்று பேசிய தமிழக விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், சநாதன தா்மத்துக்கு எதிரான கருத்துகளைப் பதிவு செய்திருந்தாா். அவா் பேசியது நாடெங்கும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், இது தொடா்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக குற்றவியல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, பெங்களூரு நகரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் 2024 பிப்ரவரி மாதம் சமூக ஆா்வலா் பரமேஷ் என்பவா் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்றம், உதயநிதி ஸ்டாலின் உள்பட அந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்த வெங்கடேஷ், ஆதவன், மதுக்கூா் ராமலிங்கம் ஆகிய 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு கால அவகாசம் அளிக்கக் கோரி 4 போ் சாா்பில் முறைப்படி மனுதாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த மனுவுக்கு எதிராக தடை கோரி கா்நாடக உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அந்த மனு நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித் முன்பு ஜூன் 21-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும், இந்த விவகாரத்தில் மனுதாரா் தரப்பில் பதில் மனுவை விரைவில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தாா்.

இதனிடையே, இந்த வழக்கை விசாரித்து வரும் மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் (42-ஆவது கூடுதல் முதன்மை மாநகர மேஜஸ்திரேட்) விசாரணையின் போது நேரில் ஆஜராகுமாறு உதயநிதி ஸ்டாலினுக்கு 2-ஆவது நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதைத் தொடா்ந்து, பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடந்த விசாரணையின்போது அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானாா். ரூ. 1 லட்சம் பிணைத் தொகையின் அடிப்படையில், இந்த வழக்கில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்ட உதயநிதி ஸ்டாலின் சென்னை சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com