
புதுதில்லி: விதிமீறி இயக்கப்படும் பிற மாநிலப் பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு தமிழ்நாடு அரசு தடை பிறப்பித்திருந்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற பிற மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழ்நாட்டிற்குள் வந்து செல்வதற்கு அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 1,535 ஆம்னிப் பேருந்துகள் முறையாக பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகின்றன. வெளிமாநில பதிவெண் கொண்ட 905 ஆம்னி பேருந்துகளில் 112 பேருந்துகள் மட்டுமே தமிழகத்தில் மறுபதிவு செய்துள்ளன.
இன்னும் 793 ஆம்னிப் பேருந்துகள் போக்குவரத்து ஆணையரகம் மூலம் விடுக்கப்பட்ட பலகட்ட எச்சரிக்கைகளையும் மீறி, தங்கள் இயக்கத்தை நிறுத்தவில்லை.
இத்தகைய பேருந்துகளால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு குறைந்த பட்சம் ரூ.34.56 கோடி நிதி இழப்பு ஏற்படுகிறது. எனவே, விதிமீறும் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் குறித்து ஜூன்18-ஆம் தேதி முதல் தீவிர தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து மாநிலம் முழுவதும் 62 ஆம்னி பேருந்துகள் விதிமீறல்களுக்காக முடக்கி வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான இவ்வகை ஆம்னி பேருந்துகள் அவற்றின் உரிமையாளா்களால் இயக்கப்படவில்லை.
மேலும், ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கம் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும், 200-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனா்.
தொடா்ந்து அனைத்து பேருந்துகளின் இயக்கத்தையும் முறைப்படுத்துவதாகவும் உறுதி அளித்துள்ளனா். அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று (ஏஐடிபி) விதிப்படி இயங்கும் ஆம்னி பேருந்துகள் இயங்க தடையில்லை.
விதிமீறி இயக்கப்படும் பிற மாநிலப் பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் மட்டுமே முடக்கப்படுகின்றன என தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், 2023 நவம்பர் 6 மற்றும் ஜூன் 18 ஆகிய தேதிகளில் பிற மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து ஆம்னி பேருந்துகளும் கட்டாயப் பதிவு செய்திருக்க வேண்டும் என தமிழக வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட மாநில அரசின் உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கே. ஆர். சுரேஷ் குமார் மற்றும் ஏஐடிபி வைத்திருக்கும் பிற மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து நடத்துநர்கள் தாக்கல் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக்கால நீதிபதிகள் பி வி நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் இதுபோன்ற உத்தரவுகளால் பிற மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளம், கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு அதிக எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்கும் நிலையில், இதற்காக தமிழகம் வழியாக செல்ல வேண்டியுள்ளது.
மேலும், இதேபோன்ற நடவடிக்கைகளில் 2023 டிசம்பர் 15 ஆம் தேதி உச்ச நீதிமன்றண் தென்மாநிலத்தில் மறுபதிவு செய்யும் செயல்முறையை மேற்கொள்ளாமல், தமிழகத்தில் பேருந்து நடத்துநர்கள் தங்கள் வாகனங்களை இயக்க அனுமதித்தது என்றும், தமிழக அரசின் உத்தரவு மேட்டார் வாகனச் சட்டம், 1998(எம்.வி.ஏ) பிரிவு 46-க்கு முரணானது என மனுதாரர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து நடத்துநர்கள், அத்தகைய வாகனங்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்காக மாநிலத்திற்குள் தங்களது வாகனங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று (ஏஐடிபி) வைத்துள்ள வாகனங்கள் எந்த தடையும் இன்றி தமிழகம் வழியாக வந்து செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும், ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.