நீட் விலக்கு தீர்மானம் தமிழக பேரவையில் நிறைவேற்றம்

நீட் விலக்கு சட்ட முன்வடிப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம்
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Published on
Updated on
2 min read

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேரவையில் இன்று முன்மொழிந்தார்.

அவர் முன்மொழிந்து பேசுகையில்,பள்ளிக்கல்வி மதிப்பெண்களின் அடிப்படையில், சமூகநீதியையும், அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கு சமவாய்ப்பையும் உறுதிசெய்யக்கூடிய முன்னோடி சேர்க்கை முறையை நாம் பின்பற்றி வருகிறோம். இந்த முறையால்தான் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மருத்துவர்கள் உருவாகவும், அனைத்துப் பகுதிகளுக்கும் சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்கிடவும் முடிந்தது.

ஆனால் 2017 ஆம் ஆண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை அரசு கட்டாயமாக்கிய பின்பு, இந்த நிலை முற்றிலும் மாறி, மருத்துவப் படிப்பு என்பது ஏழையெளிய மாணவர்களுக்கு எட்டாக்கனி ஆகிவிட்டது. பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல முடியாத கிராமப்புற, ஏழையெளிய மாணவர்களால் இந்தத் தேர்வில் வெல்ல இயலாது. அதுமட்டுமல்ல; கிராமப்புறப் பகுதிகளிலும் பின்தங்கிய பகுதிகளிலும் வழங்கப்படும் மருத்துவ சேவைகளையும் எதிர்காலத்தில் இந்த முறை பாதிக்கும்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான், நீட் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே, அதனை அரசியல்ரீதியாகவும், சட்டரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். தி.மு.க. சார்பில் மட்டுமல்ல; கழக இளைஞரணி சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. குறிப்பாக, மாணவர் அணியையும், மருத்துவர் அணியையும் ஒருங்கிணைத்து, “நீட் விலக்கு-நம் இலக்கு” என்ற மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இவற்றையெல்லாம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தன்னுடைய பரிந்துரையில் விரிவாக எடுத்துச் சொல்லியிருந்தார்.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்கள், அரசியல் கட்சிகள், சமூகச் சிந்தனையாளர்கள் என அனைவரிடமும் அசைக்கமுடியாத கருத்தொற்றுமை நிலவி வருகிறது. இதனடிப்படையில், ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.இராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இந்தச் சட்டமன்றப் பேரவையில் 13.09.2021 அன்று தமிழ்நாடு மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம், 2021 என்ற சட்டமுன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகும் ஆளுநரால் அதற்கான ஒப்புதல் வழங்கப்படாமல், மறுபரிசீலனை செய்திட திருப்பி அனுப்பப்பட்டது.

இந்நிலையில், என் தலைமையில் 05.02.2022 அன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, இந்தச் சட்டமுன்வடிவினை மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்துவது தொடர்பான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, 08.02.2022 அன்று சட்டமுன்வடிவு மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு ஆளுநரால் அனுப்பப்பட்டு, இதுகுறித்து  மத்திய அரசால் கோரப்பட்ட  அனைத்து விளக்கங்களுக்கும் தமிழ்நாடு அரசு உடனுக்குடன் உரிய பதில்களை வழங்கியுள்ள நிலையிலும், இதற்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வின் போது அரங்கேறியுள்ள சம்பவங்கள், போட்டித் தேர்வுகளில் மீது நமது மாணவர்கள் வைத்துள்ள நம்பிக்கையையே நிலைகுலையச் செய்துள்ளன.

இதுவரை இருந்திராத அளவிற்கு, அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது.

- தேர்வுகள் காலதாமதமாகத் தொடங்கியதாகக் காரணம் காட்டி, விதிகளில் இல்லாத முறையில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.  இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதால், இந்தக் கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு, இவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்டது.

பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் வெளியானதாக தகவல்கள்.

- தேர்வு மையத்தில், தேர்வுக் கண்காணிப்பாளரே விடைத்தாள்களை நிரப்பிய ஊழல் எனக் குவிந்துள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள், பல ஆண்டுகாலம் உழைத்து, பெரும் செலவழித்து, இந்தப் போட்டித் தேர்வுக்குத் தயாரான மாணவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்து, தவறே நடைபெறவில்லை என்று கூறிய மத்திய அரசு, பின்பு மாண்பமை உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்கிய பின்னரே, இந்தத் தேர்வை நடத்தும் என்டிஏ அமைப்பின் தலைவரை மாற்றியுள்ளது. தேர்வு முறைகேடுகள் குறித்து எழுப்பப்படுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து, பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பெறும் 12வது வகுப்பு மதிபபெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்காக இந்தச் சட்டப்பேரவை ஒருமானதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்ட முன்வடிவிற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பல முறைகேடுகளுக்கு வழிவகுத்து வரும் இந்தத் தேர்வு முறையை பல்வேறு மாநிலங்களும் தற்போது எதிர்த்து வரும் நிலையில், தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.