இஸ்ரேல் போரில் பலியான முதல் இந்தியர்! பின்னணி...

கர்ப்பிணி மனைவியையும் 5 வயது குழந்தையையும் பிரிந்து, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இஸ்ரேல் வந்துள்ளார்
குடும்பத்துடன் பட்நிபின் மேக்ஸ்வெல்
குடும்பத்துடன் பட்நிபின் மேக்ஸ்வெல்

லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள், இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.

கொல்லப்பட்ட நபர் கேரளத்தைச் சேர்ந்த பட்நிபின் மேக்ஸ்வெல் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவருடன் புஷ் ஜோசப் ஜார்ஜ் மற்றும் பால் மெல்வின் ஆகிய இருவரும் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களும் கேரளத்தைச் சேர்ந்தவர்களே.

இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட தெற்கு காஸாவில், தோட்டங்களில் பணிபுரிந்துகொண்டிருந்தவர்கள் பலர் இதில் படுகாயமடைந்துள்ளதாகவும் இந்திய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

குடும்பத்துடன் பட்நிபின் மேக்ஸ்வெல்
24 மணிநேரத்தில் 97 பாலஸ்தீனர்கள் படுகொலை!

ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த 31 வயதான பட்நிபின் மேக்ஸ்வெல், கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர்.

தனது கர்ப்பிணி மனைவியையும் 5 வயது குழந்தையையும் பிரிந்து, கடந்த இரு மாதங்களுக்கு முன்புதான் இஸ்ரேல் சென்றுள்ளார் பட்நிபின். அதுவே அவர் தனது குடும்பத்தினரை நேரில் பார்த்த கடைசி நாளாக இருக்கும் என்று அவரின் குடும்பத்தினர் எதிர்பார்க்கவில்லை.

இது தொடர்பாக பேசிய பட்நிபின் மேக்ஸ்வெல்லின் தந்தை, பாத்ரோஸ் மேக்ஸ்வெல், ''தனது அண்ணனின் வழியைப் பின்பற்றி பட்நிபினும் இஸ்ரேலுக்கு வேலைக்குச் சென்றான். இதற்கு முன்பு மஸ்கட், துபையில் வேலை செய்து சொந்த மண்ணுக்குத் திரும்பினான். இங்கு சில நாள்கல் இருந்துவிட்டு, அதன் பிறகே இஸ்ரேலுக்குச் சென்றான். முதலில் என் மூத்த மகன் சென்றான். அவனின் உதவியால் இளைய மகனும் இஸ்ரேலுக்குச் சென்றான்.

இந்த துக்கச் செய்தியை என் மருமகள்தான் கூறினாள். இஸ்ரேலில் நடந்த தாக்குதலில் பட்நிபினுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக மாலை 4.30 மணிக்கு தகவல் கிடைத்தது. நள்ளிரவு 12.45 மணிக்கு அவன் இறந்துவிட்ட செய்தி வந்தது.

என் மருமகள் 7 மாத கர்ப்பிணி. 5 வயதில் குழந்தையும் உள்ளது. ஆவண சரிபார்ப்பு, சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து, என் மகன் பட்நிபினின் உடல் கேரளத்துக்கு வந்துசேர 4 நள்கள் ஆகிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்'' எனக் குறிப்பிட்டார்.

என் 5 வயது குழந்தை அப்பாவுடன் பேசவேண்டும் என அடம்பிடித்தால் என்ன செய்வேன், இரண்டாவது குழந்தை பிறப்புக்கு இந்தியாவிற்கு வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்ததாக அவரின் மனைவி கூறுகிறார்.

இஸ்ரேல் - ஹமாஸ் படைக்கு இடையிலான போரில் முதல்முறையாக இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

வடக்கு - தெற்கு இஸ்ரேலில் வசித்துவரும் இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும் என இஸ்ரேலிலுள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக வடக்கு இஸ்ரேல், தெற்கு இஸ்ரேல் எல்லைகளில் சென்று வேலை செய்பவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் அரசுடன் இந்திய துதரக அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் தூதரகம் அறிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான போரில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு வரும் துயரத்திற்கு இடையில் முதல்முறையாக இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com