தேர்தல் பத்திர வரிசை எண்களை வெளியிட வேண்டும்: எஸ்பிஐ-க்கு உச்ச நீதிமன்றம் அதிரடி!

தேர்தல் பத்திர வரிசை எண்களையும் வெளியிட வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு(எஸ்பிஐ) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பத்திர வரிசை எண்களை வெளியிட வேண்டும்: எஸ்பிஐ-க்கு உச்ச நீதிமன்றம் அதிரடி!

புதுதில்லி: பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சமா்ப்பித்த தோ்தல் நன்கொடை பத்திர விநியோக விவரங்கள்’ என்ற தலைப்பின் கீழ் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள், தனிநபா்கள் மற்றும் அதை பணமாக மாற்றிய அரசியல் கட்சிகள் என தனித்தனியாக இரு பட்டியல்களை தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்த நிலையில், தேர்தல் பத்திர வரிசை (பிரத்யேக) எண்களையும் வெளியிட வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு(எஸ்பிஐ) உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

தோ்தல் நன்கொடை பத்திர திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வு கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி தீா்ப்பளித்தது. மேலும், இப்பத்திரங்கள் விநியோகம் தொடா்பான விவரங்களை தோ்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சமா்ப்பிக்கவும், அதை தோ்தல் ஆணையம் தனது வலைதளத்தில் மாா்ச் 15-ஆம் தேதிக்குள் வெளியிடவும் மாா்ச் 11-ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, தோ்தல் நன்கொடை பத்திர விவரங்களை தோ்தல் ஆணையத்திடம் ஸ்டேட் வங்கி கடந்த 12-ஆம் தேதி சமா்ப்பித்தது.

முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், 2019, ஏப். 1 முதல் 2024, பிப். 15 வரை 22,217 தோ்தல் பத்திரங்கள் விநியோகம் செய்யப்பட்டதாகவும், அவற்றில் 22,030 பத்திரங்களை அரசியல் கட்சிகள் பணமாக மாற்றியிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

இதற்கிடையே, தோ்தல் நன்கொடை பத்திர விவரங்களை தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை மாலை தனது வலைதளத்தில் வெளியிட்டது.

‘பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சமா்ப்பித்த தோ்தல் நன்கொடை பத்திர விநியோக விவரங்கள்’ என்ற தலைப்பின் கீழ் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள், தனிநபா்கள் மற்றும் அதை பணமாக மாற்றிய அரசியல் கட்சிகள் என தனித்தனியாக இரு பட்டியல்களை தோ்தல் ஆணையம் தனது தனது இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டது.

அதில் தேதி வாரியாக அரசியல் கட்சிகள் பெற்ற நிதி விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த வகையில், கிராசிம் நிறுவனம், மெகா என்ஜினீயரிங், டொரண்ட் பவா், பாா்தி ஏா்டெல், டிஎல்எஃப் கமா்ஷியல் டெவலப்பா்ஸ், வேதாந்தா குழுமம், அப்போலோ டயா்ஸ், லக்ஷ்மி மிட்டல், ஈடல்வைஸ், பிவிஆா், சன் ஃபாா்மா, வா்த்மான் டெக்ஸ்டைல்ஸ், ஜிண்டால் குழுமம், சியா் டயா்ஸ், டாக்டா் ரெட்டீஸ் லேபரட்டரீஸ், ஐடிசி, கேபி என்டா்பிரைசஸ், சிப்லா, அல்ட்ரெடெக் சிமென்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தோ்தல் நன்கொடை பத்திரங்களை வாங்கியுள்ளன.

மேலும், கிரண் மஜும்தாா் ஷா, வருண் குப்தா, பி.கே.கோயங்கா, ஜெய்னேந்திர ஷா உள்ளிட்ட தனிநபா்களின் பெயரிலும் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.

பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, திரிணமூல் காங்கிரஸ், பிஆா்எஸ், சிவசேனை, தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி, ஜம்மு-காஷ்மீா் தேசிய மாநாட்டுக் கட்சி, பிஜு ஜனதா தளம், கோவா ஃபாா்வா்டு கட்சி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, சிக்கிம் கிராந்திகரி மோா்ச்சா, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, சிக்கிம் ஜனநாயக முன்னணி, ஜன சேனை உள்ளிட்ட அனைத்துப் பிரதான கட்சிகளும் இப்பத்திரங்களை பணமாக மாற்றியுள்ளது தோ்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலிலிருந்து தெரிய வந்துள்ளது.

தேர்தல் பத்திர வரிசை எண்களை வெளியிட வேண்டும்: எஸ்பிஐ-க்கு உச்ச நீதிமன்றம் அதிரடி!
புதிய தேர்தல் ஆணையர்கள் பதவியேற்பு!

இந்த நிலையில், தேர்தல் பத்திர வழக்கு மீண்டும் வெள்ளிக்கிழமை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி ஜே.பி.பார்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தொடக்கத்திலேயே தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் வெளியிட எஸ்பிஐ-க்கு நீதிமன்றம் உத்திரவிட்டிருந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கிக்காக யார் ஆஜராகிறார்கள்? தேர்தல் பத்திர விவரங்களை முழுமையாக வெளியிடாடது ஏன்?,

தேர்தல் பத்திர பிரத்யேக(வரிசை) எண்களை வெளிடாதது ஏன்? தேர்தல் பத்திரங்கள் எந்த தேதியில் வழங்கப்பட்டது?, யாரால் வழங்கப்பட்டது?, யாரால் பணமாக்கப்பட்டது? என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் பிரதிவாதிகளாக எஸ்பிஐ இல்லாவிட்டாலும் எஸ்பிஐ வழக்குரைஞர் ஆஜராகியிருக்க வேண்டும். விசாரணையின் போது எஸ்பிஐ வழக்குரைஞர்கள் ஆஜராகததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் பத்திரத்தின் எண்கள் தான் அதனை வாங்குபவர்களையும், நன்கொடை பெற்றவர்களையும் இணைக்கக் கூடியது. அதனை அளித்தால் தான் அது தொடர்பான விவரங்கள் முழுமை பெறும். எனவே அதனை வங்கி தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். வரும் திங்கள்கிழமைக்குள்(மார்ச்.18) எஸ்பிஐ அனைத்திற்கும் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும், தேர்தல் ஆணையத்தின் மனுவை எந்த கட்சியும் ஆட்சேபனை தெரிவிக்காததை அடுத்து தள்ளுபடி செய்தது. ஆணையம் தாக்கல் செய்த தகவல்கள் நாளை மாலை 5 மணிக்குள் ஸ்கேன் செய்யப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்படுவதை உறுதி செய்யுமாறும், டிஜிட்டலாக்க பணி முடிந்ததும், அசல் நகலை இந்திய தேர்தல் ஆணையத்திடம் திருப்பி அனுப்புமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டது. ஸ்கேன் செய்யப்பட்ட மற்றும் டிஜிட்டல் செய்யப்பட்ட கோப்புகளின் நகல் தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்த பின்னர், அந்தத் தகவல்களை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

மேலும் தேர்தல் பத்திர வரிசை எண்களையும்(பிரத்யேக) வெளியிட வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தேர்தல் பத்திர வரிசை எண்களை வெளியிடாததால், எந்த நிறுவனம் எவ்வளவு நன்கொடை வழங்கியது, அந்த நன்கொடை எந்த கட்சிக்கு சென்றது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com