
தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக தினத்தந்தி நாளிதழின் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான ஐ. சண்முகநாதன் (90) வயது மூப்பின் காரணமாக வெள்ளிக்கிழமை(மே 3) காலை 10:30 மணி அளவில் காலமானார்.வரலாற்றுச் சுவடுகள் போன்ற சிறந்த நூல்களை எழுதியுள்ளார். நாதன் என்ற பெயரில் ஏராளமான நாவல்களையும் எழுதியுள்ளார்.
இவரது மறைவுக்கு பிரபலங்கள், எழுத்தாளர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மூத்த பத்திரிகையாளரும், 2021-ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது பெற்றவருமான ஐ. சண்முகநாதன் வயது மூப்பின் காரணமாக மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா. ஆதித்தனார் காலத்தில் 1953-ஆம் ஆண்டு அந்த நாளேட்டில் உதவி ஆசிரியராகப்
பணிக்குச் சேர்ந்த சண்முகநாதன் 2023-ஆம் ஆண்டு இதழியத் துறையில் எழுபதாண்டுகளைக் கடந்த பெருமைக்குரியவர். தினத்தந்தி குழுமம் வெளியிட்டு, ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையான “வரலாற்றுச் சுவடுகள்” நூலின் ஆசிரியர். “ஒரு தமிழன் பார்வையில் 20 ஆம் நூற்றாண்டு வரலாறு”, “கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம்” வரை முதலான பல்வேறு நூல்களையும் படைத்துள்ளார்.
நீண்ட நெடிய அனுபவத்துக்கும், எண்ணற்ற பங்களிப்புகளுக்கும் சொந்தக்காரரான சண்முகநாதன் மறைவு தமிழ் இதழியல் உலகுக்குப் பெரும் இழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பத்திரிகைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.