
புது தில்லி: மக்களவைத் தோ்தலில் 6-ஆம் கட்ட தேர்தலில் தில்லியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்த எம்பி ராகுல் காந்தி, உங்கள் வாக்கு ஜனநாயகத்தை காப்பாற்றும் என்று நாட்டு மக்களுக்கு தெரிவித்தார்.
மக்களவைத் தோ்தலில் 6-ஆம் கட்டமாக உத்தரப்பிரதேசத்தில் 14, ஹரியாணாவில் 10, பிகாா், மேற்கு வங்கத்தில் தலா 8, தில்லியில் 7, ஒடிஸாவில் 6, ஜாா்க்கண்டில் 4, ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதிக்கு வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மக்களவைத் தோ்தலில் 6-ஆம் கட்ட தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தியும், அக்கட்சியின் எம்பி ராகுல் காந்தியும் தில்லி நிர்மான் பவன் வாக்கு மையத்தில் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.
வாக்களித்த பிறகு, தாய்-மகன் இருவரும் வாக்குச்சாவடிக்கு வெளியே செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
வாக்குப் பதிவுக்கு பின்னர் ராகுல் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
நாட்டு மக்களே!
வாக்குப்பதிவின் முதல் ஐந்து கட்ட வாக்குப் பதிவிலும், நீங்கள் பொய்கள், வெறுப்பு மற்றும் தவறான தகவல்களை நிராகரித்து, உங்கள் வாழ்க்கையின் அடிப்படை பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்தீர்கள்.
இன்று ஆறாவது கட்ட வாக்குப்பதிவில் உங்கள் ஒவ்வொரு வாக்கும் இதனை உறுதி செய்யும்:
- இந்தியா கூட்டணி தலைமையிலான அரசு நாட்டில் அமைந்த முதல் நாள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் தினசரி கூலி ரூ. 400 ஆக உயர்த்தப்படும்.
- 30 லட்சம் அரசு வேலைகள் உடனடியாக நிரப்பப்படும். தகுதி பெற்ற ஒவ்வொரு இளைஞருக்கும் ரூ.1 லட்சம் நிதி உதவியுடன் பயிற்சி.
- ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு பெண் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கும். இது மாதம் ரூ. 8,500 என்ற அடிப்படையில் வழங்கப்படும். இந்தியாவிலிருந்து வறுமையை நிரந்தரமாக ஒழிக்க இது உதவிடும்.
- விவசாயிகளின் வங்கி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மேலும் விவசாயிகள் கோரும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்.
உங்கள் ஒவ்வொரு வாக்கு உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதோடு ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்கும் என்பதை உறுதி செய்யும்.
ஜனநாயகத்தின் இந்த மாபெரும் திருவிழாவிற்கு நானும் அம்மாவும் வாக்களித்ததன் மூலம் பங்களித்துள்ளோம் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.