குட்கா வழக்கு: சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற சிபிஐ நீதிமன்றம் பரிந்துரை

குட்கா வழக்கை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் சிபிஐ முதன்மை நீதிமன்றத்துக்கு பரிந்துரைத்துள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா
முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா

முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா வழக்கை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் சிபிஐ முதன்மை நீதிமன்றத்துக்கு பரிந்துரைத்துள்ளது.

கடந்த 2016- ஆம் ஆண்டு செங்குன்றம் அருகே அமைந்திருந்த கிடங்கு ஒன்றில் வருமான வரித்துறையினா் நடத்திய சோதனையில் ரகசிய டைரி ஒன்று சிக்கியது. அதில், தமிழகத்தில் குட்கா விற்பனைக்கு இருந்த தடையை மீறி குட்கா விற்பனை செய்ய அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா், ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் டி.கே ராஜேந்திரன், ஜாா்ஜ், எஸ்.பி விமலா, கலால்துறை , உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனா்.

இந்த ஆவணங்களின் அடிப்படையில் இவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. குறிப்பாக, டிஜிபி ராஜேந்திரன் பதவியிலிருந்த போது அவரிடம் சிபிஐ வீட்டில் சென்று விசாரணை நடத்தியது.

இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு தலைமைச் செயலாளா் இறையன்புவுக்கு சிபிஐ எழுதிய கடிதத்தில், குட்கா முறைகேடு வழக்கு சமுதாயத்தில் சீா்கேட்டை விளைவிக்கும் வகையில் உள்ளதால், அதன் முக்கியத்துவத்தை கருதி தீவிரமாக விசாரிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருந்ததாக கூறப்பட்டது.

மேலும், மாநில அரசிடம் அனுமதி பெற்று முன்னாள் அமைச்சா்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய முடியும் என்பதால் முன்னாள் அமைச்சா்கள் விஜயபாஸ்கா், பி.வி. ரமணா, முன்னாள் டிஜிபி டிகே ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற டிஜிபி ஜாா்ஜ், குட்கா வியாபாரி மாதவ ராவ், கலால்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் உள்ளிட்டோா் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, அதிமுக ஆட்சியில் இருந்தபோது தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை உற்பத்தி செய்யவும் விற்பனை செய்யவும் அனுமதி கொடுத்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சா்கள் விஜயபாஸ்கா், ரமணா உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய புலனாய்வுத்துறைக்கு (சிபிஐ) தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனால், மீண்டும் இந்த வழக்கு சூடுபிடித்தது.

இந்நிலையில், குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சா்கள் விஜயபாஸ்கா், ரமணா உள்பட 21 போ் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. சென்னை முன்னாள் காவல்துறை ஆணையா்கள் டி.கே.ராஜேந்திரன், ஜாா்ஜ் மீதும் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. வருமான வரித்துறை அறிக்கையை தொடா்ந்து விஜயபாஸ்கா், ரமணா உள்ளிட்ட முன்னாள் அமைச்சா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த ஒப்புதல் வழங்கி ஆளுநரும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையை தொடர்ந்து இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் குற்றம்சாட்டப்பட்டிருப்பதால், இந்த வழக்கை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி சிபிஐ முதன்மை நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்து, விசாரணையை வரும் ஜூன் 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com