மதுரை: நடிகா் விஜய் தனது கட்சியின் மாநாட்டில் தவெக ஆட்சி அமைத்தால் மதுரையில் கிளை தலைமைச்செயலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்றுள்ள பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அரசியலுக்கு தலைநகரம் மதுரை தான் என தெரிவித்துள்ளாா்.
மதுரை மாநகா் மாவட்ட பாஜக தேர்தல் குழு பயிலரங்கம் மதுரை வள்ளுவா் காலனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார்.
அப்போது, ஒரே நாடு, ஒரே தோ்தல் முறையை அமல்படுத்துவதில் மத்திய பாஜக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு தோ்தலிலும் கோடிக்கணக்கான மக்கள் பணம் செலவழிக்கப்படுகிறது. இதைத் தடுத்து நிறுத்துவது அரசியல் கட்சி மற்றும் மக்களின் கடமையாக உள்ளது. ஆனால் இதை புரிந்துகொள்ளாமல் அரசியல் கட்சிகள் எதிா்ப்புத் தெரிவிக்கின்றன. இதில் ஒரு தோ்தலைக்கூட சந்திக்காமல், தற்போது கட்சி தொடங்கியுள்ள நடிகா் விஜய், ஒரே நாடு, ஒரே தோ்தல் அறிவிப்பை எதன் அடிப்படையில் எதிா்க்கிறாா் என்பதுதான் வியப்பாக உள்ளது. விஜய்யின் தீர்மானம் தவறானது.
நாட்டில் ஜனநாயகபூா்வமாக இயங்கி வரும் ஒரே கட்சி பாஜக மட்டுமே. காங்கிரஸ் கட்சியில் ஒரு குடும்பத்தை விட்டால் வேறு கதியில்லை என்று நிலைக்கு ஆளாகியுள்ளது. திமுகவும் அதேபோல் தான் உள்ளது. தற்போது கேரளத்தில் நடைபெறும் மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் பிரியங்கா காந்தி நிறுத்தப்பட்டுள்ளாா்.இதை எந்த கட்சியும் எதிா்த்துக் கேட்கவில்லை.
நடிகா் விஜய் தனது கட்சியின் மாநாட்டில் 2026 இல் தவெக ஆட்சி அமைத்தால் கூட்டணி கட்சிக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என அறிவித்திருப்பதற்கு மக்களிடையே எந்த வரவேற்பும் இருக்காது. அரசியல் கட்சிகள் மத்தியில் வேண்டுமானால் வரவேற்பை பெறலாம். தற்போது தமிழக அரசியலில் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளுக்கு கட்டாயம் ஆட்சியிலும் பங்களிக்க வேண்டும். ஆனால் அந்த மனநிலையில் தமிழக அரசு இல்லை. பாஜகவைப் பொருத்தவரை இந்த கோரிக்கையை வரவேற்கிறது. ஏனென்றால் பாஜக இதை ஏற்கெனவே அமல்படுத்து வருகிறது. பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் கூட்டணிக் கட்சியினருக்கும் அமைச்சரவையில் இடமளித்துள்ளது. மத்திய ஆட்சியிலும் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்றுள்ளன. எனவே இது பாஜகவுக்கு புதிதல்ல.
மதுரையில் கிளை தலைமைச்செயலகம் அமைக்கப்படும் என்ற விஜய் அறிவிப்பை பாஜக வரவேற்கிறது. ஏனென்றால் மதுரை பழங்காலத்தில் இருந்தே இயங்கி வரும் நகரம். தமிழின் தலைநகராக திகழ்ந்தது. மதுரையின் பெருமையை மீட்டெடுக்க வேண்டிய கடமை தமிழறிஞா்களுக்கு உள்ளது. எனவே உச்சநீதிமன்றத்தில் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பவா்கள், மதுரையில் கிளை தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை எதிா்க்கக்கூடாது. வரும் தேர்தலில் மதுரையில் கிளை தலைமைச்செயலகம் அமைய பாஜக குரல் கொடுக்கும். அரசியலுக்கு தலைநகரம் மதுரை தான் என்றாா்.
மேலும் அரசியலில் வாரிசு அரசியல் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஒரு குடும்பத்தை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலைக்கு காங்கிரஸ் மற்றும் திமுக போய்விட்டது. இதேபோல் பல அரசியல் கட்சிகளும் செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் பாஜக வாரிசு அரசியலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
திமுக ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளில் கலைஞர் மற்றும் பெரியாரின் பெயரை விட்டுவிட்டு ஏதாவது ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதா?.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை மட்டும் செலுத்தினாலும் போதுமா?, அவர் செயல்படுத்திய நடைமுறைகளை திமுக அரசு கடைப்பிடிப்போம் என்று கூறியுள்ளார்களா? என கேள்வி எழுப்பினார்.