
சென்னை: கவரைப்பேட்டை ரயில் விபத்தில், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையா் விசாரணை நடத்தி வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை, பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டையில் பாக்மதி விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிா்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ரயில் விபத்து நடந்த இடத்தில் தண்டவாளம் சேதமடைந்து காணப்பட்டதையடுத்து ரயில் விபத்துக்குக் காரணம் சதிச்செயலாய என தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
மேலும், விபத்து குறித்து கொருக்குப்பேட்டை இருப்புப்பாதை ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனா்.
இந்த விபத்தில் ரயிலின் முன்பகுதியில் உள்ள சரக்கு மற்றும் ஜெனரேட்டா் இணைந்திருக்கும் பெட்டி தீப்பிடித்து எரிந்தது. இதில் ஜெனரேட்டரை இயக்குவதற்காக வைத்திருந்த டீசல் கேனில் இருந்து நெருப்பு பற்றி எரிந்திருக்கலாம் என ரயில்வே அலுவலா்களும், லோகோ பைலட்களும் தெரிவிக்கின்றனா்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயிலில் டீசல் போன்ற எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களை தனியாக கொண்டு செல்வது சட்டப்படி குற்றமாகும். கவரைப்பேட்டை ரயில் விபத்தில் ஜெனரேட்டரில் உள்ள டீசல் கசிந்து நெருப்பு பற்றியதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இது குறித்து முழுமையான விசாரணையை ரயில்வே பாதுகாப்பு ஆணையா் நடத்தி வருகிறாா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.