
காவிரி ஆற்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி பலியான 3 மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், பிலிக்கல்பாளையம் அருகே உள்ள நகப்பாளையம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி பலியான 3 பொறியியல் மாணவர்களின் உடல்களை நாமக்கல் தீயணைப்பு துறையினர் மீட்டு ஜேடர்பாளையம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மீட்கப்பட்ட மூன்று பேர்களின் உடல்களும் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது.
பிலிக்கல்பாளையம் அருகே உள்ள நகப்பாளையம் பகுதியை சேர்ந்த சின்ராஜ். இவரது மகன் வினித் விமல்ராஜ் (21). இவர் குமாராபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இறுதியாண்டு பொறியியல் பயின்று வந்தார். அதே கல்லூரியில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவரது மகன் நந்தகுமார் (21) மற்றும் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை ஷேக் பைசுல் ரகுமான் (21) ஆகியோர் பயின்று வந்தனர். இவர்கள் 3 பேரும் நண்பர்கள். நந்தகுமார், ரகுமான் ஆகியோர் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்தனர்.
இவர்கள் சனிக்கிழமை வினித் விமல்ராஜ் வீட்டுக்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் அங்கு சாப்பிட்டுவிட்டு வினித் விமல்ராஜ் தனது பெற்றோரிடம் நானும், தனது நண்பர்களும் நகப்பாளையம் காவிரி ஆற்றில் குளித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.
காவிரி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றவர்கள் நீண்ட நேர மாகியும் வராததால் வினித் விமல்ராஜ் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர்கள் 3 பேரின் காலணிகள், ஆடைகள் மற்றும் செல்லிடைபேசிகள் காவிரி ஆற்றின் கரையில் இருந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஜேடர்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் காவல் துறை உதவியுடன் காவிரி ஆற்றில் காணாமல் போன மூன்று கல்லூரி மாணவர்களையும் இரவு முழுவதும் தேடிவந்தனர். ஆனால், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நாமக்கல் தீயணைப்புத் துறையினர் மூலம் காவிரி ஆற்றில் காணாமல் போன மாணவர்களை தேடினர். அப்போது சிறிது தூரத்தில் உள்ள ஒரு பாறை இடுக்கில் வினித் விமல் ராஜ் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். அதையடுத்து மற்ற இரண்டு மாணவர்களின் உடல்களையும் மீட்டு ஜேடர்பாளையம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிக்க: கழிப்பறைக்குள் காய்கறி கடைக்காரர் சடலம்! நடந்தது என்ன?
மீட்கப்பட்ட உடல்களை பார்த்து மாணவர்களின் பெற்றோர் கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து ஜேடர்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரமத்தி வேலூர் அருகே காவிரி ஆற்றில் குளிப்பதற்காக சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.