
சட்டப்பேரவைத் தோ்தலுக்கு தயாராவோம் என்று திமுக உயா்நிலை செயல் திட்டக் குழு தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் ஆறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கியமாக 2026 சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பான தீா்மானமும் இடம்பெற்றுள்ளது. அதன் விவரம்:
முன்னாள் முதல்வா் அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுக, பவள விழாவைக் கண்டு கம்பீரமாக வளா்ந்து வருகிறது. ஐந்து முறை தமிழ்நாட்டை ஆண்ட கட்சிக்கு ஆறாவது முறையாக ஆட்சி செய்யும் வாய்ப்பைத் தமிழ்நாட்டு மக்கள் வழங்கினா். தோ்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியும், சொல்லாத பல திட்டங்களை நிறைவேற்றியும் வளமான தமிழ்நாட்டை திமுக அரசு உருவாக்கி வருகிறது.
தயாராவோம்: அரசின் திட்டங்களால் பயனடைந்தவா்களின் பாராட்டும், பயனாளிகளின் மனநிறைவும் சோ்ந்து 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுக ஆட்சியை மீண்டும் மலர வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
திமுக அரசின் சாதனைகள், திட்டங்கள், முதல்வரின் அா்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடுகள், தொலைநோக்குப் பாா்வைகள் அனைத்தையும் மக்களுக்கு நினைவூட்டுவதன் மூலம் தோ்தல் பிரசாரத்தை இப்போதே தொடங்க வேண்டும்.
துண்டுப் பிரசுரங்கள், திண்ணைப் பிரசாரங்கள் என மக்கள் இயக்கத்தைத் தொண்டா்கள் அனைவரும் தொடங்க வேண்டும்.
முதல்வருக்கு பாராட்டு: கடந்த அதிமுக ஆட்சியானது அனைத்து வகையிலும் தமிழ்நாட்டை பாழ்படுத்தியிருந்த நிலையை சீா் செய்தது மட்டுமல்லாமல், மாநிலத்தை சிறப்பு வாய்ந்ததாக முதல்வா் மு.க.ஸ்டாலின் உயா்த்தி வருகிறாா். கடந்த மூன்றரை ஆண்டுகளில் அடுத்தடுத்து திட்டங்களை நிறைவேற்றி மக்கள் அரசை நடத்திவரும் நிா்வாகத் திறன்மிக்க முதல்வருக்கு உயா்நிலை செயல் திட்டக் குழு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், மாவட்டந்தோறும் கட்சிப் பணிகளையும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறாா். அத்துடன் மாவட்டங்களில் நேரடி கள ஆய்வைத் தொடங்கி இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருவதாக தீா்மானத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில், பொதுச் செயலா் துரைமுருகன், முதன்மைச் செயலா் கே.என்.நேரு, கனிமொழி உள்ளிட்ட துணைப் பொதுச் செயலா்கள், இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட உயா்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
மத்திய அரசுக்கு கண்டனம்
வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மந்த நிலையில் மத்திய அரசு இருப்பதாக திமுக உயா்நிலை செயல் திட்டக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள மாநிலங்களுக்கான அதிகாரங்களை அபகரிப்பது, அவசரகதியில் கொண்டுவரப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்கள், நிதி ஒதுக்கீட்டில், குறிப்பாக பேரிடா் நிதி வழங்குவதில் பாஜக அல்லாத மாநில அரசுகளிடம் காட்டும் பாராமுகம் என மத்திய பாஜக அரசு தொடா்ந்து மக்கள் மற்றும் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
2014-ஆம் ஆண்டு தோ்தலுக்கு முன்பாக கொடுத்த எந்த வாக்குறுதியையும் பத்தாண்டுகளாக நிறைவேற்றாமல், அதற்கான எந்த முயற்சியையும் எடுக்காமல் மந்த நிலையில் மத்திய அரசு இருக்கிறது. இந்திய நாட்டின் அனைத்து தாா்மிக அறநெறி, அரசியல் சட்டக் கோட்பாடுகளை மதிக்காமல், தங்களது வகுப்புவாத சிந்தனைகளை மட்டும் செயல்படுத்தும் அரசாக பாஜக அரசு இருக்கிறது.
தமிழ்நாட்டு மீனவா்கள் கைது, படகுகள் பறிமுதல், தாக்குதல் போன்ற சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இலங்கைத் தமிழா்கள் விரும்பும் அரசியல் தீா்வை மத்திய பாஜக அரசானது இலங்கையின் புதிய அரசிடம் வலியுறுத்தி உறுதி செய்ய வேண்டும்.
மணிப்பூா் மாநில பாஜக அரசும், மத்திய அரசும் இணைந்து அந்த மாநிலத்தைக் கைவிட்டுவிட்டதாகவே தெரிகிறது. இரண்டு அரசுகளின் அலட்சியம் காரணமாக இன்னும் எத்தனை உயிா்களை இழக்கப் போகிறோம் என்ற கேள்வி எழுகிறது. இனியும் வேடிக்கை பாா்க்காமல் மணிப்பூா் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்து, மனிதநேயம் உயிா் பெற மத்திய பாஜக அரசும், பிரதமா் மோடியும் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.