
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார்.
இதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் யாஷஸ்வி பெற்றார். இவர் இதுவரை 34 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
பார்டர் - கவாஸ்கர் டிராபியின் ஒரு பகுதியாக, இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன.
பெர்த்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் மோசமாக விளையாடி ரன்கள் எடுக்கத் தவறியது. இருப்பினும், பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு முன்னிலை பெற்றனர்.
ராகுல் - யஷஸ்வி அபாரம்
இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல். ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இணைந்து நிலையான ஆட்டத்தைக் கொடுத்து அணியை முன்னிலைக்கு எடுத்துச்சென்றனர்.
ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 201 ரன்கள் சேர்த்தனர். கே.எல். ராகுல் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து தேவ்துத் படிக்கல் களமிறங்கினார். அப்போது ஜெய்ஸ்வால் சதம் கடந்து 102 ரன்கள் சேர்த்து இருந்தார்.
ஆஸ்திரேலிய மண்ணில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த இந்திய தொடக்க வீரர்கள் என்ற சாதனையை இந்த ஜோடி படைத்துள்ளது.
இதற்கு முன்பு சுனில் கவாஸ்கர் - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இணைந்து 1986 இல் சிட்னி டெஸ்ட் போட்டியில் 191 ரன்கள் எடுத்து இருந்தனர். அதுவே ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய தொடக்க ஜோடி எடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்தது.
இந்த சாதனையை கே.எல். ராகுல் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி முறியடித்துள்ளது. உணவு இடைவேளை வரையில் யஷஸ்வி 141 ரன்களுடனும், படிக்கல் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.