
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் எம்ஜிஆரின் மனைவியுமான ஜானகி நூற்றாண்டு விழாவை தான் வரவேற்பதாகவும், அதிமுக நலனுக்காக அரசியல் சரிபடாது என தைரியமாக முடிவு எடுத்தவர் ஜானகி என நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டினார்.
தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதிமுக சார்பில் நடைபெற்று வரும் இந்த விழாவுக்கு கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியின் முதலில் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு, ஜானகியுடன் பயணித்தவர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதன்பிறகு, ஜானகி ராமச்சந்திரன் வாழ்க்கை தொடர்பான குறும்படம், கவியரங்கம், கிராமிய இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பின்னர் நடிகர் ரஜினிகாந்த் காணொளி வாயிலாக ஜானகி நூற்றாண்டு விழாவிற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
அந்த காணொளியில், “எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு இக்கட்டான சுழல் காரணமாக ஜானகி அரசியலுக்கு வந்தார். ஜானகி மிகுந்த தைரியம் மிகுந்தவர்.தைரியமாக முடிவெடுப்பவர். அதனால் தான் அதிமுக பிளவுபட்ட போது யாருடைய ஆலோசனையையும் கேட்காமல் அரசியல் தனக்கு சரிபட்டு வராது எனவும் நீங்கள் தான் சரியானவர் எனவும் முடிவு செய்து ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்தார். அது அவருடைய மிகப்பெரிய நல்ல குணம், பக்குவத்தை உணர்த்தியது.
அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை
எம்ஜிஆர்-க்கு அனைத்து வகையிலும் உதவியாக இருந்து வந்த ஜானகி ராமச்சந்திரனின் அரசியல் வருகை என்பது ஒரு விபத்து. அரசியலில் அவருக்கு ஈடுபாடு இல்லை. சூழ்நிலைக் கைதியாக அரசியலுக்கு வந்தார்.
அப்போது அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட போது, அதிமுக நலனுக்காக கட்சியையும், முடக்கப்பட்ட அந்த இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்காக மிகப் பெரும் தியாகத்தை செய்தவர் ஜானகி அம்மா என ரஜினிகாந்த் புகழாரம் சூட்டினார்.
ஜானகியை நான் 3 முறை சந்திதுள்ளேன். அவர் மிகவும் அன்பாக பழகக் கூடியவர். திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என எம்ஜிஆர் கூறியதாக ஜானகி அம்மையார் என்னிடம் தெரிவித்தார்.
ராமாபுரம் எம்ஜிஆர் ஜானகி வீட்டில் எப்போது போனாலும் உணவு கிடைக்கும். நாள்தோறும் 200 முதல் 300 பேர் வரை சர்வசாதாரணமாக உணவு உண்டு செல்வார்கள். இது அனைத்தும் ஜானகியின் மேற்பார்வையில் தான் நடக்கும். தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் ஜானகி, என்பதில் பெருமிதம் கொள்கிறேன். அவருக்கு இந்த நூற்றாண்டு விழாவை விமரிசையாகக் கொண்டாடுவதை நான் வரவேற்கிறேன். இந்த விழாவுக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ரஜினிகாந்த் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.