தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபென்ஜால் புயலாக உருவாகியுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டிருந்த புயல் சின்னம், இன்று(நவ. 29) பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று (28-11-2024) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஃபென்ஜால் புயலாக வலுப்பெற்றுள்ளது.
இதையும் படிக்க: ஃபென்ஜால் புயலை எதிா்கொள்ள 24 மணி நேரமும் தயாா்: மேயர் பிரியா
ஃபென்ஜால் புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக - புதுவை கடற்கரையை காரைக்காலுக்கும் - மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே 30-ஆம் தேதி பிற்பகல் புயலாக கடக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று(நவ. 29) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது