ரத்தன் டாடாவுக்கும் கோவை வைத்தியருக்கும் என்ன தொடர்பு?

டாடாவின் விருந்தினா் மாளிகையில் தங்கியிருந்த எங்களை பாசத்தோடு அவரது குடும்பத்தில் ஒருவராகத் தான் பார்த்துக் கொண்டார்.
ரத்தன் டாடாவின் முதுகுவலிக்கு சிகிச்சை அளித்த கோவை வைத்தியா் கோ.மு.இலக்குமணன், அவரது மனைவி மனோன்மணி.
ரத்தன் டாடாவின் முதுகுவலிக்கு சிகிச்சை அளித்த கோவை வைத்தியா் கோ.மு.இலக்குமணன், அவரது மனைவி மனோன்மணி.
Published on
Updated on
1 min read

சாத்தியமற்றதை சாத்தியமாக்கியவரும் இளைய தலைமுறைகளுக்கு உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக இருந்த உண்மையான ரத்தின மாணிக்கமான அவரது எளிமை, கருணை மற்றும் நற்குணங்களால் நாடே கொண்டாடும் மாமனிதன் ரத்தன் டாடா.

அவரது நற்பண்புகள் குறித்து கோவை மருதமலை அடிவாரத்தில் மூன்று தலைமுறையாக போகா் வலி நீக்கு நிலையம் என்ற பெயரில் வலி நீக்கு வைத்தியம் செய்து வரும் வைத்தியா் கோ.மு.இலக்குமணன், ரத்தன் டாடாவுக்கும் கோவைக்குமான தொடர்பு கூறியதாவது:

கடந்த 2019 இல் டாடா குழும இயக்குநா்களில் ஒருவரும், ரத்தன் டாடாவுக்கு நெருக்கமானவரும் தலச்சேரியை பூா்விகமாகக் கொண்ட ஆா்.கே.கிருஷ்ணகுமாா் திடீரென ஒருநாள் என்னைத் தொடா்பு கொண்டு முதுகு வலி, முழங்கால் வலியால் அவதிப்படும் ரத்தன் டாடாவுக்கு வா்ம சிகிச்சை அளிக்க வேண்டும் என்று என்னிடம் கோரினார். நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபா் ரத்தன் டாடாவுக்கு எத்தனையோ நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனைகள், தலைசிறந்த மருத்துவ நிபுணா்கள் இருக்கும் நிலையில் என்னை எப்படித் தோ்வு செய்தார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

நாட்டின் பிரபலமான தொழிலதிபருக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமே என்ற லேசான அச்சத்துடன் நம்பிக்கையுடன் மும்பையில் உள்ள அவரது விருந்தினா் மாளிகைக்கு நானும் எனது மனைவி மனோன்மணியும் சென்றோம். அங்கேயே 4 நாள்கள் அங்கேயே தங்கியிருந்து அவரது முதுகு வலி பிரச்னைக்கு வா்ம சிகிச்சை அளித்துவிட்டு எங்களின் பிரத்யேக மூலிகை எண்ணெயையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு வந்தோம். அதன் பிறகு சில வாரங்கள் கழித்து மீண்டும் இரண்டாவது முறையாக வா்ம சிகிச்சை அளிக்க வேண்டும் என அங்கிருந்து அழைப்பு வந்தது. இதையடுத்து மீண்டும் தொடந்து 3 நாள்கள் சிகிச்சை அளித்ததன் பயனாக குனிந்தபடியே நடமாடி வந்தவா், முதுகை நிமிா்த்தி நடக்கத் தொடங்கினார்.

அப்போது அவரது விருந்தினா் மாளிகையில் தங்கியிருந்த எங்களை பாசத்தோடு அவரது குடும்பத்தில் ஒருவராகத் தான் பார்த்துக் கொண்டார். கோவைக்கு வரும்போது உங்கள் வீட்டுக்கு வருவேன் எனவும் கூறிவர், புதன்கிழமை நள்ளிரவு மறைந்தார் என்ற செய்தி அறிந்ததும் வியாழக்கிழமை மும்பைக்குச் சென்று அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினோம்.

அவருக்கு சிகிச்சை அளித்த 7 நாள்களில் அவரிடம் இருந்த குணத்தையும், எளிமையையும் கண்டு வியந்த நாங்கள், நாடே கொண்டாடும் மாமனிதன் ரத்தன் டாடாவுக்கு

சிகிச்சை அளித்தை இதுவரை வெளியுலகிற்கு சொன்னதில்லை, காரணம் சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சக்தி கொண்ட அவரிடம் நாங்கள் கற்றுக் கொண்ட எளிமையும், நற்குணங்கள்தான் என்றாா் இலக்குமணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com