மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2.02 அடி உயர்ந்துள்ளது.
தமிழக - கர்நாடக எல்லையில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர் பிடிப்புப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை வினாடிக்கு 15,531 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 16,196 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | மாநகரப் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்!
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் செவ்வாய்க்கிழமை காலை 90.87 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் புதன்கிழமை காலை 92 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2.02 அடி உயர்ந்து உள்ளது. நீர் இருப்பு 54.96 டிஎம்சியாக உள்ளது.