சென்னையில் ரோந்துப் பணியின்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை, மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ரவிக்குமார் (59) செவ்வாக்கிழமை காலை மீனம்பாக்கம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் காலை 11.15 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டு சாலையோரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
முதல்நிலைக் காவலர் ரவிக்குமார் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
ரவிக்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு,
அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.