மத்திய இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே
மத்திய இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே

தமிழா்களுக்கு எதிரான கருத்து விவகாரத்தில் மன்னிப்பு: மத்திய அமைச்சா் ஷோபா கரந்தலஜே மீது வழக்கு ரத்து

தமிழா்களைத் தொடா்புப்படுத்தி அவதூறாகப் பேசிய விவகாரத்தில் மத்திய இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே மன்னிப்புக் கோரியதை அடுத்து அவர் மீதான வழக்கு ரத்து
Published on

கா்நாடக மாநிலம், பெங்களூரு ராமேசுவரம் உணவகத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழா்களைத் தொடா்புப்படுத்தி அவதூறாகப் பேசிய விவகாரத்தில் மத்திய இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே மன்னிப்புக் கோரியதை அடுத்து அவர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு ராமேசுவரம் உணவகக் குண்டு வெடிப்பு தொடா்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்திலிருந்து வந்த ஒருவா் பெங்களூரு ‘ராமேசுவரம்’ உணவகத்தில் குண்டு வைத்துவிட்டு தப்பிச் சென்றதாக எந்தவித ஆதாரமும் இன்றி மத்திய இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்களும் கண்டனம் தெரிவித்தனா்.

இதையடுத்து, தனது கருத்தை ஷோபா கரந்தலஜே திரும்பப் பெற்றாா்.

இந்த நிலையில், ஷோபா கரந்தலஜே பேச்சு, தமிழக-கா்நாடக மக்களுக்கு இடையே பகை, வெறுப்புணா்வை உருவாக்க முயற்சிக்கிறது. மேலும், தமிழக மக்களை தீவிரவாதிகள் என பொதுமைப்படுத்தி இரு மாநில மக்களிடையே வன்முறையைத் தூண்டுவது போலவும், பதற்றத்தை ஏற்படுத்துவது போலவும் அவரது இந்தச் செயல்பாடு உள்ளது. எனவே, இரு மாநிலங்கள் இடையே சட்டம்-ஒழுங்கைப் பாதிக்கும் விதமாக கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவைச் சோ்ந்த தியாகராஜன் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, மத்திய இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே மீது 153, 153 (ஏ), 505(1) (பி), 505 (2) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் மதுரை குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா கரந்தலஜே சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், குண்டு வெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய கருத்து எந்த உள்நோக்கத்துடனும், தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்துடன் கருத்து தெரிவிக்கவில்லை. மேலும் தனது கருத்து தமிழர்களை புண்படுத்தியதை புரிந்துகொண்டு சமூக வலைதளங்கள் மூலம் மன்னிப்பு கோரியதாகவும், தமிழர்களின் வரலாறு, கலாசாரம் மற்றும் பண்பாடு மீது மிகுந்து மரியாதை வைத்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே
பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டது ஏன்? 3 காரணங்களைக் கூறும் ராகுல்

மேலும் தனது கருத்து யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இதுதொடர்பாக அரசிடம் இருந்து தகுந்த அறிவுறுத்தல்களைப் பெற்று தெரிவிப்பதாக அரசு தலைமை வழக்குரைஞர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து வழக்கு ரத்து செய்யக் கோரும் மனு மீதான விசாரணையை செப்டம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கு வியாழக்கிழமை மீண்டும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் பி. எஸ்.ராமன், தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் ஷோபா கரந்தலஜே மன்னிப்புக் கோரியதை தமிழக மக்கள் சாா்பாக அரசு ஏற்றுக்கொள்வதாக கூறினாா்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மத்திய இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே மீது மதுரையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com