
திருவள்ளூர் மாவட்டத்தில் 150 ஏக்கரில் திரைப்பட நகர் அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவங்க இருப்பதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று (11.09.2024) சென்னை தரமணி, தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் புதிய படப்பிடிப்பு தளங்கள் அமையவுள்ள இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசின் செய்தித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள எம்.ஜி.ஆர். திரைப்பட நகரத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று முடிவு பெற்றிருக்கிறது, சில பணிகள் நடைபெற இருக்கின்றது. திரைப்பட நகரத்தில் உள்ள படப்பிடிப்பு தளம் பழுதடைந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குளிர்சாதன வசதியுடன் படப்பிடிப்பு தளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலேயே படங்களைத் தயார் செய்து, படம் எடுக்கக் கூடிய வகையில் படப்பிடிப்பு தளம் பயன்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக இன்றைக்கு அமைந்திருக்கின்றது.
மேலும் தற்போது படப்பிடிப்பு நடத்துவதற்காக 3 புதிய தளங்களைக் கொண்ட அரங்கங்கள் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்த இடங்கள் இறுதி செய்யப்பட்டு 3 புதிய படப்பிடிப்பு தளங்கள் பணிகள் 39 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவிருக்கிறது.
இதன் மூலம் படங்கள் தயாரிப்பவர்களுக்கும், திரையுலகத்தைச் சார்ந்தவர்களுக்கும், சின்னத் திரையை சார்ந்தவர்களுக்கும் இது அரிய வாய்ப்பாக நிச்சயமாக அமையும். காரணம் சென்னையிலேயே படப்பிடிப்பு நடத்துவதால் பல்வேறு சிரமங்கள் தவிர்க்கப்படுகிறது, செலவுகள் குறைக்கப்படுகிறது.
திரைப்படத் துறையினர் விரும்பக்கூடிய ஒரு திட்டமாக நிச்சயமாக இது அமையும். தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதியின் அடிப்படையில், இன்றைக்கு அதற்கானப் பணிகள் துவங்க இருக்கின்றது.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 150 ஏக்கரில் ஒரு திரைப்பட நகர் இன்றைக்கு உருவாக்கப்பட இருக்கின்றது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும் அந்த இடத்தை பார்வையிட்டு இருக்கிறார்கள். திரைப்பட நகர் அமைப்பதற்கு உகந்த இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான நிலம் மாற்றுப் பணிகள் நடைபெற்று வருகிறது, விரைவில் பணிகள் துவங்க இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.