அமெரிக்க அதிபா் தோ்தல் வேட்பாளா்களான முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை அதிபா் கமலா ஹாரிஸுக்கும் இடையிலான முதல் நேரடி விவாதம் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு (இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 6.30 மணி) தொடங்கி நடைபெற்றது.
பெரும் எதிா்பாா்ப்புகளுக்கு இடையே பென்சில்வேனியா மாகாணம், ஃபிலடெல்ஃபியா நகரில் தேசிய அரசியலமைப்பு மையத்தில் நடந்த இந்த விவாதத்தில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் இடையே 90 நிமிடங்கள் பேசினர்.
அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலின் சுவாரஸ்யமான விஷயமே தேர்தலில் களமிறங்கும் இருவரும் நேரடி விவாதம் செய்வதுதான்.
டிரம்ப் விவாதம்
விவாதத்தில் டிரம்ப் பேசியதாவது:
"அதிபர் ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். மோசமான குடியேற்றத்தால் அமெரிக்காவில் பணவீக்கம் ஏற்பட்டு பொருளாதாரம் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டது. கமலா ஹாரிஸ் ஒரு மார்க்சிஸ்ட். அவருடைய தந்தை ஒரு மார்க்சிஸ்ட், அதனால் அவரிடம் அமெரிக்காவுக்கு வளர்ச்சிக்கான எந்தத் திட்டமும் இல்லை.
கரோனா தொற்றை சிறப்பாக கையாண்டு அமெரிக்காவுக்கான சிறந்த பொருளாதாரத்தை நான் உருவாக்கினேன். அதற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை . ஜோ பைடனின் தவறான கொள்கைகளை கமலா ஹாரிஸும் பின்பற்றி வருகிறார். பைடன் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா கடுமையான அளவில் பணவீக்கத்தால் பாதித்தது. அமெரிக்காவில் சட்டவிரோத ஆட்சி பெருக அதிபர் ஜோ பைடனும் ஒரு காரணமாக இருக்கிறார். போலி வாக்குறுதிகளை கொடுத்து மாணவர்களை பைடன் ஏமாற்றினார். முக்கிய விஷயங்களில் ஜனநாயக கட்சி இரட்டை நிலைப்பாடு எடுத்தது. வங்கி கடன் ரத்து என கூறி பைடன் ஏமாற்றினார்.
எனது பிரசாரப் பொதுக் கூட்டங்களில் இருந்து ஒருவர்கூட வெளியேறுவது இல்லை. அமெரிக்கா தற்போது செல்லும் பாதையில் தொடர்ந்து பயணித்தால் மூன்றாவது உலகப் போர் மூளும் நிலை இருக்கிறது. நீதித் துறையை எனக்கு எதிராக திருப்பிவிட்டு தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றிபெற முயற்சித்து வருகிறது.
பணவீக்கம்
எனது ஆட்சிக் காலத்தில் 21 சதவீதமாக இருந்த பணவீக்கம் தற்போது 60, 70-லிருந்து 80 சதவீதத்துக்கும் அதிகமாகியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளின் சிறைகள், மனநல மையங்களில் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் இங்கு வருகின்றனர். வந்தவர்கள் அமெரிக்க- ஆப்பிரிக்கர்களின் வேலைகளை எடுத்துக்கொள்கின்றனர்.
இதனால் தொழிற்சங்கங்கள் விரைவில் பாதிக்கப்படும். அமெரிக்கா முழுவதிலும் உள்ள நகரங்களில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். அவர்கள் நம்முடைய வீடுகளைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் நம் நாட்டை அழித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.
நமது நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதாரத்தை நான் உருவாக்கினேன். அதை மீண்டும் செய்வேன். அதிக வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி பெறுவேன்.
குற்றவாளிகள், தீவிரவாதிகள், கடத்தல்காரர்களை நாட்டில் குடியேற பைடன் அனுமதி அளித்துள்ளார். தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நோக்கத்தில் சட்டவிரோத குடியேற்றத்துக்கு பைடன் அனுமதி அளித்துள்ளார்.
கருக்கலைப்பு
கமலா ஹாரிஸ், ஜோ பைடன் ஆட்சியில் 9 ஆவது மாதத்தில் கூட கருக்கலைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும் என விரும்புகின்றனர். சில மாகாணங்களில் குழந்தைகள் பிறந்த பின்னர் கொல்லப்படுகின்றனர். கருக்கலைப்பு தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் மாகாணங்களில் இருக்க வேண்டும். கடந்த 52 ஆண்டுகளாகவே கருக்கலைப்பு பிரச்னை ஒரு சிக்கலாக உள்ளது. செயற்கை கருத்தரிப்புக்கு நான் எதிரானவன் அல்ல. கருக்கலைப்புக்கு எதிரானது எனது நிலைப்பாடு; இருந்தாலும் மக்களின் கருத்துப்படி செயல்படுவேன்.
ஹாரிஸ் பைடனை விட மோசமானவர் என்றும் அவரது கொள்கைகள் அமெரிக்காவை வெனிசுலாவாக மாற்றும் என்று எச்சரித்த டிரம்ப், கமலா ஹாரிஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போகும். நான் ஆட்சியில் இருந்திருந்தால் காஸாவில் போர் நடந்திருக்காது" என்றார் டிரம்ப்.
வர்த்தகப் போரை அறிமுகப்படுத்தியவர் டிரம்ப்: கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு
"அமெரிக்க பொருளாதாரத்தை சீரழித்தவர் டிரம்ப். வர்த்தகப் போரை அறிமுகப்படுத்தியவர் டிரம்ப் தான். அவரது ஆட்சிக்காலத்தில் சுகாதாரமும், பொருளாதாரமும் மோசமாக இருந்தது.
சீனாவின் ஆயுத வலிமைக்கு டிரம்ப் உதவி செய்தார். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட சிப்களை டிரம்ப் சீனாவுக்கு விற்பனை செய்தார். அமெரிக்க பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தினார். சீனா அதிபருக்கு நன்றி தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
டிரம்ப் அரசில் கோடீஸ்வரர்களுக்கும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் உதவியாக அதிகளவில் வரிச்சலுகை கொடுத்ததே தவிர நடுத்தர மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை.
சரியான தலைவர் தேவை
பெரும் மன அழுத்தத்திற்கு மக்கள் ஆளான காலகட்டத்திற்கு பிறகே, டிரம்ப் நம்மை மோசமான வேலையில்லா திண்டாட்ட நிலையுடன் விட்டுப் போனார்.
நமது ஜனநாயகத்தின் மீது மிக மோசமான தாக்குதலை நடத்தி விட்டு சென்றார். எனவே அதிபராக இருந்து அவர் செய்த குழப்பத்தையே இன்னும் சுத்தம் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது.
நெருக்கடியான இந்த காலகட்டத்தில் காலத்தில் அமெரிக்காவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நாட்டிற்கும் மக்களுக்கும் ஒரு திறமையான, சரியான தலைவர் தேவைப்படுகிறது.
மக்கள் பிரச்னைகள், கனவுகள் குறித்து டிரம்ப் ஒருபோதும் பேசமாட்டார். அரசியலமைப்பின் மீது டிரம்புக்கு எந்த மரியாதையும் இல்லை என அவருடன் பணியாற்றிய அதிகாரி ஒருவர் என்னிடம் கூறியுள்ளனர். மக்களுக்காக நான் பேசுகிறேனா... இல்லையா? என்பதை எனது பிரசாரப் பொதுக் கூட்டங்களுக்கு வந்து பார்த்தால் தெரியும்.
வழக்குகளில் இருந்து தப்பிவிடுவார்
டிரம்பே ஒரு குற்றவாளி தான். அவர் குற்றவாளிகள் குறித்து பேசுவது வேடிக்கையாகவும், விசித்திரமாகவும் இருக்கிறது. டிரம்ப் மீண்டும் அதிபரானால் அவர் மீதான வழக்குகளில் இருந்து தப்பித்து விடுவார்.
டிரம்ப் எந்தச் சூழலிலும் அமெரிக்க அதிபராகிவிடக்கூடாது. நாடு முழுவதும் வன்முறை நடந்த போது அதைக் கைகட்டி வேடிக்கை பார்த்தவர் டிரம்ப்.
நடுத்தர மக்களின் நிலையை உயர்த்த திட்டங்களை வகுத்து வருகிறோம். டிரம்பிடம் மக்களுக்கான எந்த திட்டமும் இல்லை.
கருக்கலைப்பு
பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்று டிரம்ப் கூறக்கூடாது. ஒரு பெண்ணின் உடல் தொடர்பாக மற்றவர்கள் முடிவெடுக்க அனுமதிக்கக் கூடாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருக்கலைப்புக்கு ஆதரவாக இருப்போம். டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் தேசிய கருக்கலைப்பு கொள்கையை கொண்டு வந்துவிடுவார். கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 3 பேர் டிரம்பால் நியமனம் செய்யப்பட்டவர்கள். உலகத் தலைவர்கள் டிரம்பை பார்த்து சிரிக்கின்றனர்.
டிரம்ப் அதிபரால் தாங்காது
அமெரிக்காவின் சட்டத்தின் மீது டிரம்புக்கு நம்பிக்கை இல்லை.இவர் மீண்டும் அதிபரானால் நாடு தாங்காது என இவருடன் பணியாற்றிய அதிகாரிகளே தெரிவிக்கின்றனர். ப்ராஜெக்ட் 2025 என்ற ஆபத்தான திட்டத்தை டிரம்ப் வைத்துள்ளார்; அனைவரையும் ஒன்றிணைக்கும் அதிபரை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இவர் பிரிக்கப் பார்க்கிறார். டிரம்ப் மீண்டும் மீண்டும் சட்டவிரோத குடியேற்றத்தை பற்றி மட்டுமே பேசுகிறார். நாங்கள் நாட்டின் சுயசார்பு பொருளாதாரத்தை உயர்த்துதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம்.
நடுத்தர வர்த்தக பின்னணி உடைய என்னை உயர் பதவிக்கு தேர்ந்தெடுத்தால், அமெரிக்க குடும்பங்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு பயனளிக்கும் வகையிலான திட்டங்களை செயல்படுத்துவேன்" என்றார் கமலா ஹாரிஸ்.
கடந்த ஜூன் 27 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்துக்குப் பிறகு ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.