விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே வாழைத் தோட்டத்தில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது
வளவனூர் அடுத்த தாதம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் சத்தியராஜ் (40). விவசாயியான இவர், தனக்கு சொந்தமான வாழைத் தோட்டத்துக்கு இரவு நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச செல்வது வழக்கம்.
இந்நிலையில் வழக்கம்போல் திங்கள்கிழமை இரவு வாழைத் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றிருந்த சத்தியராஜ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
தொடர்ந்து, உறவினர்கள் வாழைத் தோட்டத்துக்கு சென்று பார்த்தபோது சத்தியராஜ் கழுத்து மற்றும் உடலில் வெட்டுக் காயங்களுடன் இறந்துகிடந்தது தெரியவந்தது
தகவலறிந்த விழுப்புரம் எஸ்.பி. தீபக்சிவாச், விக்கிரவாண்டி உட்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜி.நந்தகுமார் மற்றும் வளவனூர் போலீஸார் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினர்
தொடர்ந்து, இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
விவசாயி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.