
பேராவூரணி: மல்லிப்பட்டினம் அருகே கடலில் தவறி விழுந்து மீனவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கண்ணாடியிழை படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்த நிலையில், அவரது சடலம் செவ்வாய்க்கிழமை புதுப்பட்டினம் கரைக்கு கொண்டுவரப்பட்டது.
மல்லிப்பட்டினம் முத்துவாப்பா என்பவருக்கு சொந்தமான கண்ணாடியிழை படகில் மல்லிப்பட்டினம் பழனிவேல் (48), விஜய்(28), கீழத்தோட்டம் அரவிந்த் (22) ஆகிய மூன்று பேரும் திங்கள்கிழமை காலை 11 மணியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
சுமார் நான்கு பாகம் தூரத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக திடீரென கடலில் காற்று வீசியதில் படகின் இயந்திரம் அருகே நின்று கொண்டிருந்த அரவிந்த் மற்றும் விஜய் ஆகிய இருவரும் தவறி கடலுக்குள் விழுந்தனர்.
அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மற்றொரு படகில் உள்ள மீனவர்கள் விரைந்து வந்து கடலுக்குள் இருந்து, விஜய்யை மட்டும் மீட்டனர். அரவிந்தை தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் புதுப்பட்டினம் கடற்கரையோரம் அரவிந்த் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டது.
இறந்த அரவிந்துக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இது குறித்து சேதுபாவாசத்திரம் கடலோர காவல் குழுமத்தில் புகார் செய்யப்பட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.