ஒரே நாளில் மதுக்கடைகளை மூட முடியும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
அனைத்துக் கட்சிகளும் மது வேண்டாம், போதைப் பொருள் வேண்டாம், மது விலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகின்றன. ஆனால், இந்தியா முழுவதும் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன, மது ஆலைகள் இயங்குகின்றன.
இதுதான் நாம் முன்வைக்கிற கேள்வி. எல்லா கட்சிகளும் மதுவிலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகிறபோது இன்னும் ஏன் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன? அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கிற போது ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும்! என்று குறிப்பிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் அக்டோபா் 2-ஆம் தேதி விசிக நடத்தவுள்ள மது, போதைப்பொருள்கள் ஒழிப்பு மாநாட்டில் திமுகவும் பங்கேற்கவுள்ளது.
மது ஒழிப்பை முன்னிறுத்தி விசிக தலைவர் திருமாவளவன் தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களேக் காரணம் என்று தெரிவித்துள்ளார்.