ஹிஸ்புல்லாக்களின் புதிய தலைவர் ஹஷீம் ஷஃபிதீன்!

32 ஆண்டுகள் ஹிஸ்புல்லாக்களின் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லாவின் உறவினர் ஹஷீம் ஷஃபிதீன் ஆவார்.
Hashem Safieddine
ஹஷீம் ஷஃபிதீன்படம்: ஏஎஃப் பி
Published on
Updated on
1 min read

லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பை தோற்றுவித்தவா்களில் ஒருவரும், அந்த அமைப்பின் தலைவருமான ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட நிலையில், புதிய தலைவராக ஹஷீம் ஷஃபிதீன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹஷீம் ஷஃபிதீன், 32 ஆண்டுகள் ஹிஸ்புல்லாக்களின் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லாவின் உறவினர் ஆவார்.

முன்னதாக லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஹஷீம் ஷஃபிதீனும் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில், பின்னர் அவர் உயிருடன் இருப்பதாக செய்தி வெளியானது.

உருவ ஒற்றுமையில் ஹசன் நஸ்ரல்லாவைப் போல இருக்கும் ஷஃபிதீன், ஆரம்ப காலத்தில் இருந்து நஸ்ரல்லாவுடன் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். தெற்கு லெபனானில் உள்ள டெய்ர் கானுன் அல்-நஹ்ரில் 1964 இல் பிறந்த ஷஃபிதீன், ​1990களில் நஸ்ரல்லாவின் வாரிசாக நியமிக்கப்பட்டார்.

கடந்த 2017-ல் அமெரிக்கா நாட்டால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஷஃபிதீன், ஹிஸ்புல்லாவின் அரசியல் விவகாரங்களை கவனிப்பவராகவும், அக்குழுவின் ஜிஹாத் கவுன்சிலில் உறுப்பினராகவும் இருந்து வந்தார்.

ஷஃபிதீன் சிரிய நாட்டை ஆதரித்ததற்காக, செளதி அரேபியாவால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே நடைபெற்று வரும் போா் ஓராண்டை எட்டவுள்ளது.

அதேவேளையில் இஸ்ரேலும் லெபனானும் எல்லையைப் பகிா்ந்து வரும் நிலையில், ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்கள், இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.

எல்லையில் இஸ்ரேலும், ஹிஸ்புல்லாக்களும் நாள்தோறும் மோதலில் ஈடுபட்டு வருவதால், அங்கு வசிக்கும் இரு நாடுகளைச் சோ்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயா்ந்துள்ளனா். நூற்றுக்கணக்கான லெபனான் மக்கள் உயிரிழந்துள்ளனா்.

லெபனானில் அண்மையில் பேஜா் கருவிகள் திடீரென வெடித்துச் சிதறின. இந்த சம்பவம் நடைபெற்ற மறுநாள், அந்நாட்டில் வாக்கி டாக்கிகள், சூரிய ஒளி மின்சார கருவிகள் வெடித்துச் சிதறின. இந்தத் தாக்குதல்களில் ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்கள் உள்பட 39 போ் உயிரிழந்தனா். சுமாா் 3,000 போ் காயமடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com