பாகிஸ்தானின் புதிய சிந்து நதி கால்வாய் திட்டத்தினால் அந்நாட்டை ஆளும் அரசின் கூட்டணிக் கட்சிகளிடையே மோதல் வெடித்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தெற்கு பகுதியிலுள்ள சுமார் 1.2 மில்லியன் ஏக்கர் அளவிலான வறண்ட நிலத்துக்கு நீர்பாசனம் செய்வதற்காக அந்நாட்டு அரசு பசுமை பாகிஸ்தான் திட்டத்தின் கீழ் 3.3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பணம் ஒதுக்கி 6 கால்வாய்கள் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தினால் தங்களுக்கு கிடைக்கும் தண்ணீர் பங்கானது பாதிக்கப்படும் எனக் கூறி அந்நாட்டின் சிந்து மாகாணம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
இந்நிலையில், பாகிஸ்தான் அரசை ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (பி.எம்.எல்-என்.) மற்றும் பாகிஸ்தான் பீபள்ஸ் பார்ட்டி (பிபிபி) ஆகிய முக்கிய கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் இந்தத் திட்டத்தினால் கருத்து மோதல் உண்டானதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, பிபிபி-யின் தலைவர் சவுத்ரி மன்சூர் கூறுகையில், ஏற்கனவே தேசிய நீர் வழங்கலில் சுமார் 20 மில்லியன் ஏக்கர் அடி நீர் பற்றாக்குறையாக இருக்கும் நேரத்தில் அரசு புதிய திட்டங்களை உண்டாக்குவதாகவும் இதனால் பஞ்சாப்பின் விவசாயிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு கார்ப்பரேட் நிறுவன முறையில் விவசாயம் மேற்கொள்ள அரசு முயற்சிப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
இதனை முற்றிலும் மறுத்துள்ள பஞ்சாப் மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்மா பொகாரி, கால்வாய் திட்டத்தை அரசியலாக்குவது சிந்து மாகாணத்தின் பழக்கம் எனக் குற்றம்சாட்டியதோடு இந்தத் திட்டம் குறித்து பிபிபி-யினர் தங்களது தலைவரும் அந்நாட்டு ஜனாதிபதியுமான ஆசிப் அலி ஸர்தாரியிடம் கேட்டு தெளிவடையுமாறு கூறியுள்ளார்.
இதனிடையே, சிந்து மாகாண முதல்வரும் பிபிபி தலைவருமான முராத் அலி ஷா, சிந்து மாகாணத்தின் அனுமதியின்றி மத்திய அரசு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தங்களது கட்சி அனுமதிக்காது எனவும் தங்களது ஆதரவின்றி பாகிஸ்தானின் பி.என்.எல்-என் கட்சியின் அரசானது கவிழ்ந்து விடும் என எச்சரித்துள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தான் அரசின் சிந்து நதி கால்வாய் திட்டத்திற்கு அந்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், வியாபார சங்கங்கள் மற்றும் பல்வேறு இலக்கிய சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:காஸா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்! குழந்தைகள் உள்பட 27 பேர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.