மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோகோப்புப்படம்

இந்தியா-இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தமிழா்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்: வைகோ கண்டனம்

இந்தியா-இலங்கை உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடும் துரோகம்
Published on

சென்னை: இந்தியா-இலங்கை உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடும் துரோகம் என்று மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில்,

இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமா் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபா் அனுரா திச நாயகாவுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது இந்தியா - இலங்கை இடையே ஏழு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

அதில் முக்கியமானது, இந்தியா - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்புப் புரிந்துணா்வு ஒப்பந்தம். அதன்படி,இரு நாட்டு ராணுவங்களின் கூட்டு நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு ஒத்துழைப்பும், உதவியும் வழங்கும். இது இலங்கை அரசுடன் போடப்பட்டிருக்கும் முதல் ராணுவ புரிந்துணா்வு ஒப்பந்தம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

எங்கள் தொப்புள் கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள் ஒரு லட்சத்து 37 ஆயிரம் பேரை கொன்று குவித்தது இலங்கை ராணுவம்தான். ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இலங்கை ராணுவம் கொன்றது.தங்கள் மண்ணின் விடுதலைக்காக பல்லாயிரக்கணக்கான வீரர்களை பலி கொடுத்து தாயகத்தை மீட்பதற்குப் போராடிய விடுதலை இயக்கத்தைக் கருவறுத்தது இலங்கை ராணுவம்.

போர் களத்தில் போராடிய தமிழ் வாலிபர்கள் எட்டு பேரை நிர்வாணப்படுத்தி, கைகளைக் கட்டி பின்னந்தலையில் இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றதையும், புலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசை ப்ரியாவை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி சிதைத்து சின்னாபின்னமாக்கி சுட்டுக் கொன்றதையும் இங்கிலாந்தின் சேனல் -4 தொலைக்காட்சி வெளியிட்டு உலகின் மனசாட்சியை உலுக்கியது. இந்தக் கொடூர காட்சிகளைக் கண்ட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும், இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்ணீர் விட்டுக் கதறினர்.

இனப்படுகொலை நடத்திய இலங்கை ராணுவத்தை ஹேக் நகரில் உள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, விசாரித்து தண்டிக்க வேண்டும் என்று தமிழ் இனம் போராடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இலங்கை ராணுவத்தோடு பிரதமா் நரேந்திர மோடி ஒப்பந்தம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமன்றி தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் கொடும் துரோகமாகும்.

தமிழ் இனத்தை வஞ்சித்திருக்கும் பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய ‘ஸ்ரீலங்கா மித்ர விபூஷண’ விருது வழங்கப்பட்டிருப்பதும் பொருத்தமானது என்றுதான் தமிழ் மக்கள் கருதுவார்கள் என்று வைகோ குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com